சென்னை: எம்.எல்.ஏ. பெருமாள் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்த துக்ககரமான நேரத்தில் அதிமுகவின் இப்தார் நிகழ்ச்சி நடத்துவது பொருத்தமாக இருக்காது என்பதால் அதை ரத்து செய்வதாக அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உண்ணா நோன்பிருந்து, உள்ளத்தை தூய்மைப்படுத்தி, இறையருளால் பெற்ற பொருளின் ஒரு பங்கை ஏழை எளியோர்க்கு ஈந்து இன்புறும் இந்தப் புனிதமான ரமலான் மாதத்தில் ஒவ்வொரு வருடமும் அதிமுக சார்பில் "இப்தார் நோன்பு திறப்பு" நிகழ்ச்சி ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அதிமுகவின் சார்பில் இந்த ஆண்டு உதகமண்டலத்தில் 27.7.2013 அன்று "இப்தார் நோன்பு திறப்பு" நிகழ்ச்சி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு, இசைவு தெரிவித்திருந்த சன்னி பிரிவு தலைமை காஜி ஜனாப் முப்தி டாக்டர் ஹாஜி சலாவுதீன் முகமது அயூப், ஷியா பிரிவு தலைமை காஜி ஜனாப் ஹாஜி குலாம் முகமது மெஹடிகான், ஹாஜி சையத் மொய்னுதீன்,
ஜனாப் ஹாஜி ஆற்காடு இளவரசர் முகம்மது அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் அ. சவுந்தரராஜன் எம்.எல்.ஏ., இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் முனைவர் செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ., அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர். சரத்குமார் எம்.எல்.ஏ., அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பி. கதிரவன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர் உ. தனியரசு எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாநில முஸ்லீம் லீக்கின் தலைவர் எஸ். ஷேக் தாவூத் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள்,
கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உட்பட பல்வேறு நபர்களுக்கு முறைப்படி அழைப்பிதழ்கள் அனுப்ப இருந்த சூழ்நிலையில், ஆரம்ப கால கழக உறுப்பினரும், அதிமு கழகத்தின் மீதும், தலைமையின் மீதும் மாறாத பற்றும், பாசமும் கொண்டவரும்; கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும்; கழகத்திற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவரும்; ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவரும்; ஏற்காடு சட்டமன்ற கழக தொகுதிச் செயலாளராக பணியாற்றி வந்தவருமான சட்டமன்ற உறுப்பினர் செ. பெருமாள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என்ற செய்தி எனக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், ஆற்றொணாத் துயரத்தையும், மிகுந்த மன வேதனையையும் அளித்துள்ளது. இந்தத் துக்ககரமான தருணத்தில், அதிமுகவின் சார்பில் "இப்தார் நோன்பு திறப்பு" விருந்து நிகழ்ச்சி நடத்துவது பொருத்தமாக இருக்காது என்பதால், 27.7.2013 அன்று உதகமண்டலத்தில் நடைபெறுவதாக இருந்த "இப்தார் நோன்பு திறப்பு" நிகழ்ச்சி வேறு வழியின்றி ரத்து செய்யப்படுகிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment