கோவை: கோவையில் உள்ள மசூதி ஒன்றின் மீது இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சேலத்தில் பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் துடியலூர் என்.ஜி. ஓ. காலனியில் உள்ள மசூதி ஒன்றின் மீது இன்று மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் நல்ல வேளையாக யாரும் காயமடையவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
மேலும் கோவையில் 3 பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து மாநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் சாலைமறியல்:
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 32 பேரை டவுன் டி.எஸ்.பி. பெஸ்கி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். பாதுகாப்பு கருதி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
குமரியில் 22 பேருந்துகள் மீது கல்வீச்சு
பாஜகவின் போராட்டத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு திருவட்டாறு, தக்கலையில் 22 பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்து போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை மீண்டும் தொடர்கிறது. இதே போன்று புதுச்சேரியில் 14 பேருந்துகள் உடைக்கப்பட்டன.
அத்வானி வருகை
ஆகஸ்ட் 1ம் தேதி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி வருவதாக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அம்பாசமுத்திரத்தில் 58 பேர் கைது
பாஜக பந்த்தை முன்னிட்டு அம்பாசமுத்திரத்திலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 58 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பாசமுத்திரத்தில் திரையரங்கு அருகில் இருந்து ஊர்வலமாக கிளம்பிய பாஜகவினர் வண்டி மலைச்சி அம்மன் கோவில் அருகே மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலுக்கு மாவட்ட துணை தலைவர் தாமரைக் கண்ணன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட பாஜவினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டையில் 40 பேர் கைது
தமிழக-கேரள எல்லையான செங்கோட்டையில் வழக்கம் போல் அணைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. பாஜக பந்த்தை முன்னிட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பாஜக சார்பில் மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் தலைமையில் சுமார் 40 பேர் தாலுகா அலுவலகம் முன்பிருந்து அனுமதியின்றி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன், இன்ஸ்பெக்டர் முனிஸ்வரன் உள்ளிட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
No comments:
Post a Comment