Latest News

மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ்-கருணாநிதி அறிவிப்பு; அமைச்சர்கள் ராஜினாமா


சென்னை: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் அறிவித்தார். மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு 5 அமைச்சர்கள் உள்ளனர். திமுகவிடம் 18 எம்பிக்கள் உள்ளனர்.

அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம்:

 ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் திமுக கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்காவிட்டால் மத்திய அரசில் இருந்து விலகும் முடிவை எடுக்கும் நிலை உருவாகும் என்று எச்சரித்தார்.

மேலும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு கருணாநிதி தனித்தனியாக கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதங்களில், இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க் குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.

மேலும், நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து மத்திய அமைச்சர்கள் ஏ.கே.ஆண்டனி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் நேற்று சென்னை வந்து கருணாநிதியை சந்தித்துப் பேசினார்கள்.

நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்:

அப்போது ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய தாக்குதல்களைப் போர்க் குற்றங்கள் என்றும் இனப் படுகொலைகள் என்று பிரகடனப்படுத்தி இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற புதிய நிபந்தனையும் விதித்தார்.

டெசோ உறுப்பினர்களுடன் காலையில் ஆலோசனை:

ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இன்று காலை 11 மணி வரை மத்திய அரசின் முடிவு குறித்து எந்த தகவலும் திமுகவுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

அதிரடி அறிவிப்பு:

இந் நிலையில் இன்று டெசோ உறுப்பினர்கள் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தீவிர ஆலோசனை நடத்திய கருணாநிதி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை-. நேற்று 3 மத்திய அமைச்சர்கள் வந்து போனதுக்குப் பின் மத்திய அரசிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை.

அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவு நீர்த்துப்போகவிட்டதோடு, திமுக முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத, சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமையாக அமையும்.

கூடவே இருந்து குழி பறிக்கும் மத்திய அரசு:

நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா? என்று கேட்டதற்கு,

அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் நாடாளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டு வரட்டும் என்றார்.

இந்த பதிலைத் தான் கருணாநிதி தனது நிலையை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறியுள்ளதாக வட இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

 திமுக ஆதரவு வாபஸ் ஆனதையடுத்து மும்பை, டெல்லி பங்குச் சந்தைகள் சரிந்தன.
நன்றி :  ஒன் இந்தியா

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.