Latest News

  

மனிதநேயம் : ஒரு பார்வை...!



நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் அடுத்தவர்கள் மனதையோ, அவர்களின் உடமையையோ உடலையோ பாதிக்கா வண்ணம் முடிந்தவரை நாம் நல்லதையே செய்வோம். நல்லதையே நினைப்போம். அப்பொழுது நாமும் மன நிம்மதி அடைவதுடன் அடுத்தவர்களும் நிம்மதி அடைகிறார்கள். சில சமயம் நாம் செய்யும் கேலி,விளையாட்டுகள் கூட அடுத்தவர்கள் உயிர் போக காரணமாக அமைந்து விடுகிறது. அல்லது அவமானமாக கருதி மன நோய்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். சிலர் விளையாட்டு கிண்டல் என்னும் போர்வையில் பொழுது போக்கிற்காக ஆரம்பிக்கும் உரையாடல் வாழ்நாள் எதிரியாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் அடுத்தவர்கள் வளர்ச்சியில் பொறாமை படுவதுண்டு. இது பல தரப்பினரிடத்திலும் இருக்கிறது.

செல்வத்தால் உயர்ந்தாலும், பதவியால் உயர்ந்தாலும், மதிக்கத்தக்க மனிதனாய் உருவாகினாலும், இன்னும் சொல்லப்போனால் அறிவு பூர்வமாக பேசினால் கூட பொறாமை எனும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதன் அடிப்படை காரணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும். தாழ்வு மனப்பான்மையே..! இது ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு எப்பொழுதும் தடையாகவே இருக்கும்.

சாதிக்கும் மனிதனும், சாதிக்கப்பிறந்தவனும் போட்டி கொள்வான். பொறாமை ஒரு போதும் கொள்ள மாட்டான். போட்டி இட்டு முன்னேறுங்கள். பொறாமைப்பட்டு பின்நோக்கி போய் விடாதீர்கள்.

இவ்வுலக வாழ்வு நிலையான வாழ்வல்ல. எந்தநேரத்திலும் எந்த நிமிடத்திலும், ஏன் அடுத்தநொடி கூட உத்திரவாதமில்லாமல் அழியக்கூடிய வாழ்வு. அப்படி நாம் ஏற்றுக்கொண்ட இந்த அற்ப வாழ்வில் சொர்ப்பகாலம் கழித்திடவே எத்தனை கொடுஞ்செயல்கள், எத்தனை வன்முறைகள், எத்தனை மனித நேயத்துக்கு புறம்பான காரியங்கள், நினைக்கவே நெஞ்சம் பதைக்கிறது. ஏன் ..?  இத்தனையும்  எதற்காக செய்கிறான் மனிதன்,,?

புரியாத புதிராகவே விடை தெரியாமல் முடிவில்லாமல் காலம் கரை புரண்டோடி போய்க்கொண்டு இருக்கிறது. நாம் சொந்தமென நினைத்து உரிமை கொண்டாடும் அனைத்தும் நாம் விட்டுச்செல்ல இருப்பவைகளே..! நம்முடன் ஒரு போதும் கூட வருபவைகள் அல்ல. மனிதன் இதை முழுமையாக உணர்ந்தாலே இவ்வுலகில் நடை பெரும் அனைத்துப்பிரச்சனைகளையும்  ஒரு நொடியில் முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும்...!

இறைவன் படைத்த அனைத்து படைப்புக்களிலும் மிகச்சிறப்பாய் படைக்கப்பட்ட படைப்பு தான் நம் மனிதப்படைப்பு. ஆறாம் அறிவான பகுத்தறிவை மனிதனுக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளான். இதன் மூலம் மனிதன் மற்ற படைப்பினங்களிலிருந்து விலகி உயர்ந்து நிற்கிறான். இந்த பகுத்தறிவு நம்மிடம் இருப்பதினால் தான் நன்மை தீமை, நல்லது எது கேட்டது எது, என அனைத்திலும் தீர யோசித்து முடிவெடுக்க முடிகிறது. இப்படி ஒரு உயர் படைப்பான மனிதப்படைப்பை சீர்குலைத்து மற்ற பிற  அறிவுக்குறைவான மிருகக்குணம் கொண்டவனாய் நடந்து கொள்ளும் நிலை தான் இன்று நாடு முழுவதும் வெவ்வேறு கோணத்தில் அரங்கேறி வருகிறது. இது மிகவும் பரிதாபத்திர்க்குரிய விஷயமாக இருக்கிறது...!?!?!

மனிதன் மனிதனாக வாழ கற்றுக்கொள்வோம். அடுத்தவர்களையோ அடுத்த மதத்தினரையோ, அடுத்த இனத்தினரையோ ஒரு போதும் மனதளவிலும் உடலளவிலும், பேச்சளவிலும் துன்புறுத்தாமலிருப்போம். அடுத்தவர்களை நோகடிக்கவோ துன்புறுத்தவோ நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அது படைத்த இறைவனை தவிர்த்து ...!

இறையச்சம்  மனதில் வந்து விட்டால் எந்த தவறான பாதையையும் தேர்ந்தேடுக்கத்தோனாது. அது ஒரு புறம் இருக்க  இறைவன் நமக்காக இவ்வுலகை படைத்தது மட்டுமல்லாது நாம் சுவித்து இன்பமாய் வாழ எத்தனை வகை அதிநவீன சாதனங்கள், எத்தனை வகை கனிமவளங்கள், எத்தனை வகை உணவுகள், எத்தனை வகை ஆபரணங்கள் அலங்கார பொருட்கள் உடைகள் என அத்தனையும் மனிதனுக்காக வழங்கி அழகு பார்க்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி மனிதன் என்ன கைமாறு செய்துள்ளான்...???? நம்மிடம் இறைவன் எதிர் பார்த்தது என்ன..???

தூய்மையான இறை வணக்கம், துவேசமில்லா மனப்பான்மை, மது.மாது, சூது, வட்டி, வரதட்சணை, பதாகச்செயல்கள், பழிவாங்கும் எண்ணம் மற்றும் இறைவனுக்கு ஒவ்வாத காரியங்களை விட்டும் ஒதுங்கி நற்ச்செயல்கள், நேர்மை,  நியாயம், நன்னடத்தை, வன்செயல்களை தவிர்த்தல், தீயவைகளை விட்டு விலகி இருத்தல், நன்மைகள் செய்தல், புறம்,கோல்,பொறாமை எனும் மனித நேயத்திற்கு அப்பாற்ப்பட்ட செயல்களை விட்டு தூரமாய் இருத்தல், சகோதரத்துவத்தை பேணுதல், இப்படியுமாக நன்மை பயக்கும் விசயங்களை மட்டுமே இறைவன் மனிதனிடத்திலிருந்து எதிர் பார்க்கிறான்.

மாறாக நாம் கொடுஞ்செயல்கள் புரிந்து கொண்டும், கொள்கையை விட்டு விலகியவர்களாகவும், மறுமைச்சிந்தனை இல்லாதவர்களாகவும், அடுத்த மனிதர்களை இழிவு படுத்துபவர்களாகவும், தவிர்க்கப்படவேண்டியவைகளை தன் அருகில் வைத்துக்கொள்பவர்களாகவும், தார்மீகப் பொறுப்பு இல்லாதவர்களாகவும், கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும்,பொறாமை புரை யோடியவர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.

நாம் இவ்வுலகிற்கு வரும்போது எதையும் எடுத்து வரவில்லை. ஆனால் திரும்பிச்செல்லும் போது நிச்சயமாக நாம் எடுத்துச்செல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. அதுவே நாம் இவ்வுலகில் செய்த இலாப நஷ்டக் கணக்குகள்..! செய்த பாவங்களுக்கும் புண்ணியங்களுக்கும் இறைவனிடத்தில் நிச்சயம் கணக்கு ஒப்படைத்தே ஆக வேண்டும். இதை நம்புபவர்கள் அனைத்து செயல் பாடுகளிலும் தீமையை விட்டு விலகி விடுவர். ஆகவே அடுத்தவர்கள் மனம் நோகடிக்கும் காரியங்களை தவிர்த்து இவ்வுலக வாழ்வு முடிவுறும் நாள் வரும் வரை நல்லோர்களாக நன்மைகள் பல செய்து நாடு போற்றவும் நம் சன்னதிகள் போற்றவும் மதிக்கத்தக்க நன் மனிதர்களாக வாழ்ந்து  இவ்வுலகை விட்டு விடை பெறுவோமாக..!

அதிரை மெய்சா

e-mail : myshaadirai@rediffmail.com
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.