Latest News

வீட்டுக்குள்ளே இருந்தாலும் கவனமா இருங்க பெண்களே!




மதுரை: பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று வெளியே செல்லும் பெண்களுக்குத்தான் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்றில்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட அச்சுறுத்தல்களும், அவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

நம் வீட்டிற்குள் கேபிள், பிளம்பிங், எலக்ட்ரிகல் வேலை என்று நுழையும் சில நபர்கள் நமக்குத் தெரியமாலேயே ஸ்பை கேமராவை பொருத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இவற்றை படம் பிடித்து அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து காசு பார்த்து விடுகின்றனர். இது நடந்தது மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் இல்லை. நாகரீக வாசம் அதிகம் எட்டிப்பார்க்காத மதுரை மாவட்டத்தில்தான்.

ஸ்பை கேமரா எச்சரிக்கை

மதுரை அருகேயுள்ள கிராமமும் நகரமும் கலந்த ஒரு ஊரில்தான். இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலும் அந்த ஊர்ப் பெண்கள் எல்லாம்... வீட்டுக்கு பின்புறத்தில் நான்கு பக்கமும் தென்னந்தட்டி மறைத்துக் கட்டப்பட்டிருக்கும் ‘பாத்ரூம்'களில்தான் குளிக்க வேண்டும், உடை மாற்ற வேண்டும். விஷமக்கார இளைஞர்கள் சிலர், அந்த தட்டிக்கு இடையில் கேமராக்களை வைத்து படம் பிடித்துள்ளனர். அதேபோல, படுக்கை அறைகளிலும் கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர். அவற்றையெல்லாம் எம்.எம்.எஸ், ப்ளூ டூத், மெமரி கார்டு என்று தங்களுக்குள் பகிர்ந்தது மட்டுமல்லாது, சி.டி. போட்டு விற்பனையும் செய்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக நடந்து வந்த இந்த அநியாயம்... சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், தன்னுடைய செல்போனில் ‘படம்' பார்த்துக் கொண்டிருந்தது ஊரார் கண்களில் சிக்கியது. போலீஸ் வரை போனால் ஊர்ப் பெண்களின் மானம் பறிபோகும் என்று பதறிய ஊர்க்காரர்கள், எல்லா இளைஞர்களின் மெமரி கார்டுகளையும் பறிமுதல் செய்து எரித்திருக்கிறார்கள். பாதிப்பிற்குள்ளான பெண்கள் தற்கொலைக்கு செய்து கொள்ள துணிந்திருக்கின்றனர்.

மொபைல்போன் எச்சரிக்கை

இது, எங்கோ... யாருக்கோ... நடந்த சம்பவமில்லை. எங்கும் நடந்துகொண்டிருக்கும் கொடுமையே. கொஞ்சம் உஷாராக இல்லாவிட்டால், யார் வேண்டுமானாலும் இதில் சிக்கக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
‘நடிகைகள் தங்கும் பிரமாண்ட ஹோட்டல்களின் அறைகள், புதுமண ஜோடிகள் தங்கும் டூரிஸ்ட் ஸ்பாட் விடுதி அறைகள், ஜவுளிக் கடைகளின் டிரெஸ்ஸிங் ரூம்கள்... இங்கெல்லாம் ரகசிய கேமராக்கள் பதுங்கி இருக்கலாம்... ஜாக்கிரதை' என்று ஏற்கெனவே ஏகப்பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் வீடுதேடி வரும் வில்லங்கங்களை எப்படி சமாளிப்பது என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.
சீனாவில் இருந்து ‘ஸ்பை பாத்ரூம் கேமரா'ங்கிற பேரில், டூத் பிரஷ், பாத்ரூம் க்ளீனிங் பிரஷ், சோப் பாக்ஸ்ல எல்லாம் வைக்கிற மாதிரி விதவிதமான கேமரா மார்க்கெட்ல குவியுது. விலை அதிகம்கிறதால, இதை உபயோகப்படுத்தறவங்க பொருளாதார பலம் உள்ள ஹைடெக் ஆசாமிகளாத்தான் இருக்கணும். ஆனால் தற்போது ஹைடெக், காம்பாக்டு மொபைல்கள் வந்துட்டதால, அதை பாத்ரூம்ல வைக்குறதும் ஈஸி, எடுத்த காட்சிகளை ப்ளூ டூத், சி.டினு பகிர்ந்துக்கறதும் சுலபம் என்கின்றனர்.

கவனம் பெண்களே

வீட்டிற்குள் உள்ள பெண்கள்தான் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும். பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சிலிண்டர் பாய், தண்ணீர் கேன் கொண்டு வருபவர், கேபிள்காரர் என்று வீட்டிற்குள் நுழைபவர் தெரிந்த நபராகவே இருந்தாலும் அலர்ட்டா இருக்கவேண்டும். அவர் வேலை முடிச்சுப் போறவரைக்கும் கண்காணிச்சுட்டே இருந்து அனுப்பி வைக்கவேண்டும் என்கின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் வெளியே சென்ற உடன் வீட்டிற்குள் உள்ள பொம்மை, நைட் லேம்ப், சுவர்க்கடிகாரம் என வீட்டில் இருக்கும் பொருள் ஏதாவது இடம் மாறியிருந்தால் அதை கண்காணிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள். அதேசமயம் அநாவசியமா யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கக் கூடாதுங்கறதுல கவனமா இருக்கணும்.

கடும் நடவடிக்கை

இது குறித்து பேசிய மதுரை மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன், "இப்படியொரு சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கவில்லை. விஷயம் வெளியில் தெரிந்ததுமே பல பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால்... பயந்துபோன ஊர்க்காரர்கள் புகார் தரத்தயங்குகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், ஈவ் டீசிங் புகார் தரப்பட்டிருப்பதால், அந்த வழக்கில் நான்கு பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவான ஒரு நபரை தேடி வருகிறோம். முழுமையான புகார் தரப்படும் பட்சத்தில் கண்டிப்பாக கடும் நடவடிக்கை உண்டு என்று கூறியுள்ளார்.

"உங்கள் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்து அதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டும். பெயரை வெளியிட விருப்பம் இல்லாவிட்டால், போன் மூலமாகவே தகவலாக சொல்லலாம். புகார் கொடுக்கும்பட்சத்தில், போன் பேச்சு (வாய்ஸ் ரெக்கார்ட்), வீடியோ போன்றவற்றை ஆதாரமாகக் கொடுக்கலாம். இவை எதுவுமே இல்லை என்றாலும் கவலைப்படத் தேவைஇல்லை. எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் கொடுத்தாலே... கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்போம். சம்பந்தப்பட்ட குற்றவாளியின் லேப்டாப், செல்போன் போன்றவற்றிலிருந்தே ஆதா ரங்களை நாங்கள் சேகரித்துவிடுவோம் என்றும் நம்பிக்கை ஊட்டியுள்ளார்.

தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி எந்தளவிற்கு பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பதை... பலத்த அதிர்ச்சியோடு மீண்டும் ஒரு முறை உறைய வைத்திருக்கிறது...

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.