Latest News

புகையிலை... பகையிலை!


சென்னையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் குடியிருக்கும் பெண்மணி அவர். ஒருநாள் பல்வலியால் தவிக்க, பக்கத்து வீட்டில் உள்ள பாட்டி ஒருவர் குறிப்பிட்ட கம்பெனியின் பெயரைச் சொல்லி 'அந்தப் பாக்கை வாங்கிப் போடு, சரியாகும்’ என்றிருக்கிறார். அவரும் அதன்படி போட, போதையில் பல் வலி போய்விட்டது. அதாவது, வலியை அவரால் உணர முடியவில்லை. தினமும் அந்தப் பாக்கை வாங்கிப்போட்டிருக்கிறார். அதுவும் கைக்கு அடக்கமான விலையில் கிடைத்ததால் காசுக்குப் பிரச்னையே இல்லை. பாக்கைப் போட்டு போட்டு அவருடைய பற்கள் கறை படியத் தொடங்கின. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் இதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஒருநாள் உறவினர் ஒருவர் எதேச்சையாகப் பார்த்தபோது போதைப் பாக்கின் தீமையைப் பற்றிச் சொல்ல, அலறி அடித்துக்கொண்டு புற்றுநோய் மருத்துவரைப் பார்த்திருக்கிறார். பரிசோதனையில் வாய்ப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தன. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாகத் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார் அந்தப் பெண்மணி.

இப்படித் தெரிந்தும், தெரியாமலும் புகையிலையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால், தற்போது மாரடைப்புக்கு அடுத்தபடியாகப் புற்றுநோய்தான் விரைவில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காரணியாக இருக்கிறது என்கிறார் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் புற்றுநோய் உளவியல் துறை மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டு வள மைய உதவிப் பேராசிரியர் டாக்டர் சுரேந்திரன்.

'புகை பிடிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்பற்றி எல்லோருக்கும் ஓரளவுக்குத் தெரியும். அதேசமயம், புகைபிடிப்பதற்கு நிகரான பாதிப்புகளை உண்டாக்கக் கூடிய புகையிலையை வாயிலிட்டுச் சுவைத்தல், போதைப் பாக்குகளைப் பயன்படுத்துதல், மூக்குப்பொடி போடுதல் போன்றவற்றின் அபாயம்பற்றி நம் மக்களிடம் அந்த அளவுக்கு விழிப்பு உணர்வு இல்லை. 

புகையிலையில் சுமார் 3500 ரசாயனங்களுக்கு மேல் இருக்கின்றன. அவற்றில், சுமார் 60 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. இந்த ரசாயனங்களை 'கார்சினோஜென்ஸ்’ (Carcinogens), அதாவது புற்றுநோய் ஊக்குவிப்பான்கள் என்று குறிப்பிடுகின்றனர். மிக முக்கியமாக, புகையிலையில் இருக்கும் 'நிகோடின்’ (Nicotine) ரசாயனம்தான் அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது. பாக்கில் 'அரிக்கா டானின்’(Areca tannin) ) என்ற வேதிப்பொருள் உள்ளது. இதற்கு புற்றுநோயைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இருப்பதாக ஏற்கெனவே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். தற்போது புற்றுநோய் தவிர, வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் (Metabolic syndromes), சர்க்கரை நோய் மற்றும் உடற்பருமன் ஆகிய பிரச்னைகளும் ஏற்படுவதாக சவுதி பல்கலைக்கழகம் நடத்திய எட்டு ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனுடன் புகையிலையும் சேரும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகமாக இருக்கும்'' என்ற டாக்டர் சுரேந்திரன், போதைப் பாக்குகளில் சேர்க்கப்படும் பொருட்கள் பற்றியும் விவரித்தார்.

'கொட்டைப் பாக்கு, புகையிலை, மரப்பட்டைச்சாறு, பாரபின் மெழுகு - இவைதான் போதைப் பாக்குகளின் மூலப்பொருட்கள். இவற்றில் புகையிலை போன்ற சில பொருட்கள் மாவாக அரைத்துச் சேர்க்கப்படுகின்றன. இவற்றுடன் வேறு சில போதை வஸ்துகளையும் சேர்த்து வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வாசனைகளில் விற்கிறார்கள். விற்கும் கம்பெனிகளைப் பொருத்து, இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களின் எண்ணிக்கையும் மாறுபடுகிறது. இதில் கொடுமையான விஷயம், ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கினால்கூட அதில், என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு உள்ளது என்ற விபரம் உறையில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இதுபோன்ற போதைப் பாக்குகளில் அப்படி எந்தக் குறிப்பும் கிடையாது' என்று ஆதங்கப்பட்டார் டாக்டர் சுரேந்திரன்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில்தான் இப்படிப் புகையிலையை வாயிலிட்டுச் சுவைக்கும் பழக்கம் இருந்துவந்தது. மேலைநாடுகளில் புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்த ஆரம்பித்த பிறகு, நம்மவர்கள்போல் அவர்களும் இப்படி வாயிலிட்டுச் சுவைத்தனர். ஆனால், அதன் பாதிப்புகள்குறித்து தெரியவந்தபிறகு அங்கு இவற்றின் பயன்பாடுகளைக் குறைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். நாம்தான் விடாமல் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். சரி, இது போன்ற பாக்குகள் அப்படி என்னதான் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன?

'90 சதவிகித வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதற்கு புகையிலையை வாயிலிட்டுச் சுவைப்பதுதான் காரணம். அதற்காக மற்ற இடங்களில் புற்றுநோய் வராது என்று சொல்ல முடியாது. தொண்டை, உணவுக்குழாய், நுரையீரல், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய், ஆசனவாய், கருப்பை என உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். காரணம், வாய் மூலம் சுவைக்கும்போது ரத்தத்தில் கலந்துவிடுவதால், ரத்தம் பயணிக்கும் எல்லாப் பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

போதைப் பாக்கில் உள்ள ரசாயனங்கள் ரத்த நாளங்களின் அளவைக் குறைப்பதால், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். இதனால் இதயத்துக்குப் போதுமான ரத்தம் கிடைக்காமல் மாரடைப்பு ஏற்படும். பற்களில் கறை ஏற்பட்டு, வாய் துர்நாற்றம் உண்டாகும். பக்கவாதம் ஏற்படுவதற்கு 50 சதவிகிதக் காரணம் புகையிலைதான். மேலும், விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஆண்மை குறைவை உண்டாக்கும். கர்ப்பிணிகள் புகையிலையைப் பயன்படுத்தும்போது நஞ்சுக்குழாய்க்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து அபார்ஷன் ஏற்படலாம். சமயங்களில் குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்பு உள்ளது.

புகையிலை பயன்படுத்தி எவ்வளவு வருடங்கள் கழித்து பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்து இரண்டு வருடங்களிலோ அல்லது இருபது வருடங்களிலோகூட பாதிப்பு வரலாம். பிற காரணங்களால் புற்றுநோய் ஏற்பட்டால் குணப்படுத்துவது ஓரளவு எளிதானது. ஆனால், புகையிலையால் புற்றுநோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கான காலமும் வேதனையும் அதிகம்'' என்கிறார்கள் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களான ரோகிணி பிரேம்குமாரி மற்றும் டி.ராஜா. 
இந்த விஷயத்தில் இன்னொரு வேதனை என்னவென்றால் தமிழகத்தைப் பொருத்தவரை போதைப் பாக்குகளை விற்க இங்கே பல வருடங்களாகத் தடை உள்ளது. இருந்தாலும் பெரிய நகரங்களில் தொடங்கி சிற்றூர்கள் வரைக்கும் இவை பகிரங்கமாக விற்கப்படுகின்றன. 

அரசாங்கம் இனியேனும் விழித்துக்கொள்ளுமா?

நன்றி: www.vikatan.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.