இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதமாக தயாரிக்கப் பட்டுள்ள திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இதற்கு அமெரிக்க அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுரித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட நிறுவனம் தயாரித்த இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் என்ற திரைப்படம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதற்கு நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தை அமெரிக்க அரசு அனுமதித்திருக்கவேக் கூடாது. அதைவிடுத்து, திரைப்படத் தயாரிப்பாளரின் தனிமனித சுதந்திரத்தில் தலையிட முடியாது என்று அமெரிக்க அரசு கூறியிருப்பது இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயலாகும். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்புக் கேட்பதுடன், திரைப்படத்துக்கு உலகம் முழுவதும் தடை விதிக்க வேண்டும். என கூறியுள்ளார்.
மேலும் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மனித குலம் போற்றுகின்ற நபிகள் நாயகத்தை மிகமிக மோசமாக இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவர் அமெரிக்காவில் வசிக்கிறார். குற்றங்கள் செய்ததற்காக சிறையில் இருந்து பரோலில் வந்து இருக்கிறார். தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டிய இந்தத் திரைப்படத்தைத் தயாரித்த குழுவினுடைய பெயர் தான், மனதை வாள் கொண்டு பிளக்கிறது. காரணம், அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, நீதியை உலகத்துக்கு உபதேசித்து, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரின் பெயரைச் சூட்டிக்கொண்ட, `கிறிஸ்துவுக்கான ஊடகம்' என்று பெயர் சூட்டிக் கொண்ட கொடுமை ஆகும்.
ஆனால், `இந்தப் படம் அரசின் வெளியீடு அல்ல' என்றும், `தனி மனித சுதந்திரத்தில் தலையிட முடியாது' என்றும், அமெரிக்க அரசாங்கம் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் அக்கிரமம் ஆகும். அமெரிக்க அரசு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்; இப்படத்தைத் தயாரித்த கூட்டத்தைக் கைது செய்து சிறையில் அடைத்துத் தண்டிக்க வேண்டும். இப்படத்தைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல், இனியும் ஏற்படக் கூடிய விபரீதங்களுக்கு அமெரிக்க அரசே பொறுப்பாளியாக நேரும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment