டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று முறைப்படி விலகியது. பிரதமர் மன்மோகன்சிங்கிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மத்திய அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை நேரில் அளித்தனர்.
டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள 72 மணி நேர கெடுவையும் திரிணாமுல் காங்கிரஸ் விதித்திருந்தது. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி அறிவித்திருந்தார்.
ராஜினாமா ஒப்படைப்பு
மமதா அறிவித்திருந்தபடி இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.
ராஜினாமா செய்தவர்கள் யார்?
ரயில்வே அமைச்சராக இருந்த முகுல் ராய், சுற்றுலா துறை இணை அமைச்சரான சுல்தான் அகமத், சுகாதாரத் துறை இணை அமைச்சரான சுதிப் பண்டோ பாத்யாய, ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சரான ஷிஷிர் அதிகாரி, தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சரான சவுத்திரி மோகன் ஜாதுவா, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சரான சாவுகதா ராய் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கொடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment