இளைய தலைமுறை, எப்போதும் மொபைல் போனில் வெட்டியாக அரட்டை அடிப்பதையும், விடிய விடிய எஸ்.எம்.எஸ்.,சில், “கடலை’ போடுவதையும், மொபைல் போன் வாங்கித் தரும் பெரியவர்கள் ரசிப்பதில்லை. இதற்கு மறுபக்கமும் உள்ளது என்பது போல், இளைஞர்கள் கூட்டம், குறுந்தகவலை, சமூக சேவைக்காக பயன்படுத்திக் காட்டியுள்ளது.சேலம் மாவட்டம், ஊஞ்சகாடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் தன் மொபைலில் இருந்து, தினமும் காலையில், 200 பேருக்கு, “தகவல் மேடை’ என்ற பெயரில், பொது அறிவு செய்திகளையும், மாலை, “உங்களின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில், அறிஞர்களின் சிந்தனைகள், போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் தினங்களில் அன்றைய தினத்தின் சிறப்பு, அதற்கான அவசியம் குறித்து குறுந்தகவல் அனுப்புகிறார்...
”"டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், “நீங்கள் தினமும் அனுப்பிய பொது அறிவு, அறிஞர்களின் பொன்மொழி ஊக்கமாக இருந்தது. தேர்வில் கேட்கப்பட்ட பல கேள்விக்கான பதில்களை, நீங்கள் எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளீர்கள்’ என்ற போது, உண்மையாகவே சிலிர்த்து போனேன்,” என கூறிய தேவராஜ், “தேவா எஸ்.எம்.எஸ்., நெட்’ என்ற பெயரில், குறுஞ்செய்தி வட்டாரத்தை நடத்தி வருகிறார்.புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜயகுமார், “இனியா’ என்ற பெயரில் குறுந்தகவலாக வாரம் ஒரு முறை வெளியாகும் இதழை நடத்துகிறார்.
இலக்கியம், அறிவியல், சமூக விழிப்புணர்வு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த இதழுக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். இதில் வெளியாகும் கவிதைகள், “ஏழைதாசன்’ என்ற சிற்றிதழில் வெளியாகின்றன.”"புதிதாக எழுத வருகிறவர்களை ஊக்குவிப்பது தான், குறுந்தகவல் இதழின் நோக்கம்,” என்ற விஜயகுமார், “”பிரபல பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பி, பிரசுரமாகாத படைப்பாளர்கள் பலரை ஊக்குவிப்பது தான், எங்கள் பணி. அதை முடிந்த அளவிற்கு சரியாக செய்து வருகிறேன். நான் ஒரு சிலருக்கு அனுப்புவேன். அவர்கள் இதழோட தரத்தை பார்த்து, பலருக்கு அனுப்புறாங்க…” என்கிறார்.
சென்னையில், எஸ்.எம்.எஸ்., வட்டார நண்பர்களுக்காக வலைப்பூ bcsms.blogspot.com) நடத்தும் சந்திரசேகர், தினமும் 350 பேருக்கு, பயனுள்ள செய்திகளை, காலை மற்றும் மாலையும் அனுப்புகிறார்.நண்பர் வட்டாரங்களில் வரும் சிறந்த குறுஞ்செய்திகளை, தன் வலைப்பூவில் பதித்து, உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். இவரது குறுஞ்செய்திகள், திருநங்கைகள், குழந்தைத் தொழிலாளர் என, சமூக பிரச்னைகளைப் பேசுகின்றன.
கே.எம்.ஆர்., மூலிகை நெட் குறுஞ்செய்தி இதழ், சமீபத்தில், 1,500 நாள் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளது. மூலிகை குறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இந்த குறுந்தகவல் இதழ் நடத்தப்படுகிறது. இதிலிருந்து தினமும் 700 பேருக்கு தகவல் அனுப்பப்படுகிறது.இந்த இதழின் தொடர்ச்சியான வேண்டுகோளை ஏற்று, பலர் இயற்கை உணவு முறைக்கு மாறியுள்ளனர். “”நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் பிடியில் சிக்கி, இயற்கையை மறந்து வருகிறோம்.
இதை மாற்ற வேண்டும் என்பது தான் என் கொள்கை. அதற்கு எஸ்.எம்.எஸ்., இதழை பயன்படுத்தி வருகிறேன்,” என கூறுகிறார், மூலிகை நெட் நடத்தும், சென்னையைச் சேர்ந்த, விஜயகுமார்.ரசிக்கவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் என்பது மட்டும் இல்லாமல், பலரின் வாழ்வில் நல்ல பயனைத் தந்துள்ளது குறுந்தகவல் வசதி. “”என் தங்கை திருமணத்திற்கு காசில்லாமல் சிரமப்பட்ட போது, என் நெருங்கிய நண்பன் மூலமாக, எஸ்.எம்.எஸ்., வட்டார நண்பர்களுக்கு செய்தி பரவி, அவர்கள் அளித்த நிதியுதவியுடன் என் தங்கை திருமணம் நடந்தது,” என, கண்களில் நீர் வழிய சொல்கிறார், குறுந்தகவல் வட்டாரத்தில் பங்கேற்கும் புவனேந்திரன்.
- அ.ப.இராசா -
No comments:
Post a Comment