Latest News

தமிழகத்தில் 950 வகை நோய்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்

 முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 950 வகை நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக அரசு பதவிக்கு வந்தவுடன், கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் விரிவுபடுத்தப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்...
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் முழுமையான புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன். தற்போதைய காப்பீட்டுத் திட்டம் 2011, ஜுலை மாதம் 5 ஆம் நாள் உடன் முடிவடைந்தது. எனது அரசால் புதிதாக தொடங்கப்பட இருக்கும் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக அமையும்:

1.
முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச மருத்துவச் செலவு, இந்த புதியத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரையிலும் அனுமதிக்கப்படும். அதாவது, நான்கு வருடங்களில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய்க்கான மருத்துவச் செலவினை பெற இயலும். 

2.
முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்த 642 வகையான சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, தற்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படும். 

3.
சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். மேலும் அரசு மருத்துவமனைகளின் மூலமாகவோ, மருத்துவ முகாம்களின் மூலமாகவோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாத இனங்களில், ஏற்கெனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில், பரிசோதனைச் செலவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்படவில்லை.

4.
நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து ஐந்து நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். இந்த வகையிலான கட்டணங்களை பெறுவதற்கு முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.

5.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு, வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும் முந்தைய திட்டத்தில் வழிவகை செய்யப்படாத ஒன்றாகும்.

6.
அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள முறைகளை மாற்றி, சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது போல் அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும். மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

7.
இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்திற்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி / சிறப்புப் பகுதிகள் அமைக்கப்படும். இதனால் இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடி வருவதற்குரிய சூழ்நிலை உருவாகும்.
இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்குவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில், உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருத்துவக் கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசே நேரடியாக வழங்கும்.
இவ்வாறு, இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை எனது அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.