சாதிக் பாட்ஷா இறந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை வசம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ம.பு.து அதிகாரிகள் நேற்று மாலையே சென்னையில் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தினார்கள்.
தேனாம்பேட்டை காவல்துறையினர் சாதிக் பாட்ஷா வின் மனைவி மற்றும் உறவி னர்கள், நண்பர்களிடம் நடத்திய விசாரணை, பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் ஆகியவற்றை முழு விவரங்களுடன் 2 நாளில் மத்திய புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
நேற்று காலை சாதிக் பாட்ஷா வீட்டில் இருந்த போது காரில் வந்த சிலர் அவரை வெளியே அழைத்துச்சென்றனர். திரும்பி வரும் போது சாதிக் பாட்ஷா முகம் வாடிய நிலையில் காணப்பட்டார். அதன் பிறகுதான் அவர் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு காரில் வந்தவர்கள் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டியிருக்கலாம். இதனால் பயந்து போய் தற்கொலை முடிவுக்கு வந்து இருக்கலாம் என்று காவல்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது....
தற்போது சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டதாக தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக அவரை தற்கொலைக்குத் தூண்டியது யார் என்று விசாரிக்கிறார்கள்.
மாலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக சாதிக் பாட்ஷாவை டெல்லிக்கு அழைத்து இருந்தனர். இதற்காக அவர் டெல்லி செல்ல இருந்தார். ஆனால் அதற்கு முன்பே அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே காரில் வந்து சாதிக் பாட்ஷாவை மிரட்டியது யார்? எதற்காக மிரட்டினார்கள் என்று விசாரிக்கிறார்கள். சாதிக் பாட்ஷா பயன் படுத்திய செல்போன் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது. அதில் அவருடன் யார்-யார் பேசினார்கள் என்ற விவரங்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகிறார்கள். இதன் மூலம் சாதிக் பாட்ஷாவுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் காவல்துறையினர் இறங்கி உள்ளனர்.
சாதிக் பாட்ஷா சாகும் முன் எழுதிய கடிதங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு சில வரிகளே வெளியிடப்பட்டுள்ளன. முழு விவரங்களையும் காவல்துறையினர் வெளியிடவில்லை. இந்தக் கடித விவரங்களை காவல்துறையினர் முழு அளவில் விசாரணை நடத்தி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். சாதிக் பாட்ஷா இறந்த விவரம் குறித்து உச்ச நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டிய நெருக்கடியில் சி.பி.ஐ. உள்ளது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் சாதிக் பாட்சா மரணம் குறித்த முழுவிவரங்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : இந்நேரம் .காம்
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment