Latest News

துளிர்களின் கனவு மெய்ப்பட...

அன்பிற்கினியவர்களே !

வழக்கமாக வலைமேய்ச்சலில் ஊடுருவிக் கொண்டிருக்கும்போது இப்படியும் வாசிக்க நேர்ந்த்துஆதலால் உங்களின் பார்வைக்கும் சிந்தனைக்கும்… (நன்றி ஆன்ந்த விகடன்)
பளபளக்கும் ஷூ, கழுத்தை இறுக்கும் டை, நுனி நாக்கு ஆங்கிலம், யாரைப் பார்த் தாலும் 'அங்கிள் - ஆன்ட்டி!

பொதுவாக, ஆங்கிலப் பள்ளி மாணவர்களின் அடையாளம் இதுதான். படிப்பு, படிப்பு, படிப்பு... பள்ளிக்கூடங்கள் திணிப்பதும் இதைத்தான். பெற்றோர்கள் விரும்புவதும் இதைத்தான். ஆனால், ஓர் ஆசிரியர் நினைத்தால்... மாற்றங்கள் சாத்தியம்தான்!...

திருச்சியில் ஒரு தலைமை ஆசிரியர் தனது வித்தியாசமான முயற்சிகளால், ஆங்கிலப் பள்ளிகளின் இந்த அடையாளத்தைக் கொஞ்சம் மாற்ற முயற்சிக்கிறார். அவர், திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியர் துளசிதாசன்.
''பள்ளிக்கூடங்கள் வெறுமனே ஏட்டுக் கல்வி யைச் சொல்லித் தர மட்டும் இல்லை. சமூகத்தை எதிர்கொள்ளவும், வாழ்க்கையை எதிர் கொள்ளவும் ஒரு குழந்தையை முழுமையாகத் தயார் செய்வதே பள்ளிக்கூடங்களின் பணி. வாழ்க் கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு வேண்டும் என்பதையும், அந்தக் கனவை நனவாக் குவது எப்படி என்பதையும் உணர்த்தும் வகையில் 'கனவு மெய்ப்படதிட்டத்தைச்

செயல்படுத்துகிறோம். இதன்படி, மாதந்தோறும் ஓர் ஆளுமையை - நிஜ உலகக் கதாநாயகரை அழைத்து வந்து, இங்கு பேசச் சொல்கிறோம். இதுவரை அப்படி வந்து பேசியவர்களில் நடிகர் சிவகுமார், நம்மாழ்வார், தமிழருவி மணியன், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், வெ.இறையன்பு, மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சமூகத்தின் முன் வரிசை நாயகர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்தத் திட்டம். இதுபோலவே 'விடை பெறுதல்திட்டம் என்று ஒன்று உள்ளது. பள்ளியில் பணியாற்றும் சமையல்காரர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் விழா எடுத்து, அவர் களை மேடைக்கு அழைத்து, அவர்களுடைய முக்கியத்துவத்தைச் சொல்லி, அவர்களைக் கௌரவப்படுத்தும் திட்டம் இது.
அப்புறம் 'விடுமுறை உலகம்திட்டம். விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கான அசைன்மென்ட் இது. கிராமப் பள்ளி மாணவர் கள், அரசு மருத்துவனை நோயாளிகள், கூலித் தொழிலாளிகள்... இப்படி யாரையேனும் ஒவ்வொரு மாணவரும் சந்திக்க வேண்டும். அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய வாழ்க்கை முறையைக் கட்டுரையாக்க வேண்டும். சமூக ஏற்றத் தாழ்வுகளைப் புரிந்து கொள்ளவும், நமக்குத் தெரியாத இன்னோர் உலகத்தை அறிந்துகொள்ளவும் இது உதவும்.
நம் சமூகத்தில் அறிஞர்களைக் கொண்டாடும் வழக்கம் இப்போது குறைவு. இதனால், நாம் வாழும் காலத்தின் அறிஞர்கள் யார் என்பதுகூட நமக்குத் தெரிவது இல்லை. இதை மாற்றவும் மாணவப் பருவத்திலேயே நல்ல அறிஞர்களைக் கொண்டாடும் பழக்கத்தை உருவாக்கவும் 'அறிஞர் போற்றுதும்... அறிஞர் போற்றுதும்திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். எழுத்தாளர் அசோகமித்திரன், கீரனூர் ஜாகீர் ராஜா, தேனி சீருடையான் போன்றோரை அழைத்துக் கௌரவம் செய்தோம்.
அடுத்தது, 'துளிர்திட்டம். மாணவர்கள் சுதந்திரமாக விவாதிக்க வாய்ப்பு அளிக்கும் மேடை. எதைப்பற்றியும் வெளிப்படையாக விமர்சிக்கலாம், விவாதிக்கலாம்.
'வாசிப்பின் அவசியம்திட்டத்தின் கீழ் வாரம் இரண்டு நூலக வகுப்புகளைக் கட்டாயமாக்கி இருக்கிறோம். இந்த வகுப்புகளில், ஒவ்வொரு மாணவரும் புதிய நூல்களைப் படித்து, அவற்றில் பாதித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இவை தவிர, வாரம் ஓர் உலகத் திரைப்படம் திரையிட்டுக் காட்டுகிறோம். இவை எல்லாமே சின்ன முயற்சிகள்தான். ஆசிரியர்கள் மனது வைத்தால், எல்லாப் பள்ளிகளிலும் இதுபோல ஆயிரமாயிரம் முயற்சிகள் சாத்தியம்!'' என்கிறார் துளசிதாசன்.

சரி, இந்த முயற்சிகள் எல்லாம் மாணவர் களிடம் எத்தகைய மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன? சில மாணவ, மாணவிகளுடன் பேசினோம்.
''நான் கீரை விற்பவர் ஒருவருடன் உரையாடினேன். அதன் பிறகு, சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லும் பழக்கத்தையே விட்டுவிட்டேன்!'' என்கிறார் சஹானா ராய் என்ற மாணவி.
அரசு மருத்துவனைகளுக்குச் சென்று வந்த சண்முகசுந்தரம், வெங்கடேஸ்வரன் என்கிற மாணவர்கள், ''அங்கு நோயாளிகள் நடத்தப்படும் விதம் எங்களைக் கடுமையாகப் பாதித்தது!'' என்கிறார்கள்.
பொதுவாக, இங்கு உள்ள மாணவர்கள் நவீன நாடகங்கள் முதல் ஸ்பெக்ட்ரம் முறைகேடு வரை எல்லாவற்றையும்  தெரிந்துவைத்து இருக்கிறார்கள்.
விடை பெறும்போது ஒரு மாணவர் கேட்டார்... ''சார், மரண தண்டனை சரியா, தவறா? உங்க கருத்து என்ன?''
நம்புங்கள்... ஒரே ஒரு ஆசிரியர் நினைத்தால்கூட... உலகத்தையே மாற்ற முடியும்!
நன்றி :
அபு-இபுறாஹீம்
தகவல் : அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.