Latest News

ஜப்பான் உணர்த்தும் பாடம்!

சரித்திரம் இதுவரை சந்திக்காத சோதனை ஜப்பானில் நிகழ்ந்திருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக இயற்கையின் சீற்றமும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அணு உலைகளின் வெடிப்பும், மனித இனத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தின் அதிர்ச்சியை எதிர்கொள்ளத் தயாராவதற்குள், உயர்ந்தெழுந்த ஆழிப்பேரலை ஜப்பானின் வட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கோர தாண்டவம் ஆடி அந்த தேசத்தையே நிலைகுலைய வைத்து விட்டிருக்கிறது.

 இத்தோடு விட்டேனா பார் என்று பூகம்பமும், ஆழிப்பேரலையும் அடங்குவதற்குள் கடற்கரை ஓரமாக அமைந்த அணு மின் நிலையங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அணு மின் உலைகள் வெடித்துச் சிதறத் தொடங்கின. அதன் தொடர் விளைவாக, ஜப்பானை மட்டுமல்ல, அந்த நாட்டைச் சுற்றியுள்ள கடல்கடந்த தேசங்களைக் கூட அந்த அணு மின் உலைகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு பாதிக்கக்கூடும் என்கிற செய்தி உலகையே பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ...

 அணு ஆயுதப் போரின் கோர விளைவுகளைச் சந்தித்த ஒரே நாடான ஜப்பான் இப்போது அணுசக்தியின் இன்னொரு கோர முகத்தையும் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கியம். அணுமின் சக்தியை மின் தேவைகளுக்கு ஜப்பான் மிக அதிகமாக நம்பவேண்டிய நிலையில், பல அணு மின் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் ஜப்பான் மின்சாரம் இல்லாமல் தவிப்பது ஒருபுறம். அணு உலைகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்குப் பயந்து வெளியில் செல்ல முடியாமல் முடங்கிக் கிடப்பது மறுபுறம். இதெல்லாம் போதாதென்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து, உற்றார் உறவினரை இழந்து, ஒரு சில மணி நேர ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தால் நடுத் தெருவில் அனாதையாக நிற்க வேண்டிய நிர்பந்தம் மற்றொரு புறம். யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது இப்படி ஓர் அவலம்.

 அணு மின் நிலையங்கள் மனிதனின் விஞ்ஞான வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக வர்ணிக்கப்பட்டு வந்தன. ஆனால் அணுசக்தியின் அபாயங்கள் எத்தகையவை என்பதை ஜப்பானைப் பார்க்கும்போதுதான் உணர முடிகிறது. ஜப்பானியக் கடற்கரை ஓரமாக அமைந்த புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட இரண்டு வெடிப்புகளால் ஏற்கெனவே கதிர்வீச்சுள்ள ஆவி வெளியாகிக் கொண்டிருக்கிறது.

 விபத்து ஏற்படும் அறிகுறி தெரிந்தால் உடனடியாக அணு உலைகள் தானாகவே நிறுத்தப்படும் வசதிகள் இந்த அணு மின் நிலையங்களில் இருக்கத்தான் செய்தன. ஆனால், அணு மின் நிலையம் நிறுத்தப்பட்டால், புதிதாக அணுப் பிளவு நடைபெறாதே தவிர, ஏற்கெனவே நடைபெற்று வரும் அணுப் பிளவையும் அதன் மூலம் வெளியேறும் கணக்கிலடங்காத எரிசக்தியையும், அணு உலையை நிறுத்தியதால் முற்றுப்புள்ளி வைத்து நிறுத்த முடியாது. அதுதான் பிரச்னை.
 அப்படியே அணு உலையின் இயக்கம் நிறுத்தப்பட்டாலும் அதில் காணப்படும் கணக்கிலடங்காத வெப்பத்தை எப்படிக் கட்டுப்படுத்தித் தணிப்பது? இந்த வெப்பத்தை அவ்வப்போது தணிக்கவும், அணு உலைகள் அளவுக்கு அதிகமாக வெப்பமாகி வெடிக்காமல் பாதுகாக்கவும், குளிர்ந்த நீர் அந்த உலைகளைச் சுற்றிக் குழாய்களின் மூலம் தொடர்ந்து பாய்ச்சப்படும். ஆனால், இந்தக் குளிர்ந்த நீர்க் குழாய்களை இயக்கும் இயந்திரம் மின்சாரத்தில் இயங்குவன. சுனாமியின் வேகத்தில் எல்லா இயந்திரங்களும் பாழாகி, மின்சாரம் நின்றுவிட்ட நிலையில், அணு உலைகளைக் குளிர்ச்சியடையச் செய்யும் குழாய்களும் செயலற்று விட்டன.

 வெடித்துச் சிதறிய அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க இன்னும் பல மாதங்கள் கடல் நீரைப் பாய்ச்சியபடியும், அவ்வப்போது கதிரியக்கத்தைக் காற்று மண்டலத்தில் வெளியிட்டும்தான் நிறுத்த முடியும் என்று கூறுகிறார்கள். அதாவது இத்துடன் முடிந்துவிடவில்லை அணுசக்தியால் ஏற்பட்ட அழிவு என்று அர்த்தம்.
 உலக மக்கள் தொகையில் 40% மக்கள் கடற்கரையிலிருந்து 100 கி.மீ. தூரத்துக்குள் தான் வாழ்கிறார்கள். உலகின் பெரு நகரங்கள் என்று வர்ணிக்கப்படும் 19 நகரங்களில் 14 நகரங்கள் கடற்கரை ஓரமாக அமைந்தவைதான்.

 பத்து நாடுகள் முழுக்க முழுக்கக் கடற்கரையை ஒட்டிய 100 கி.மீ.க்குள் மக்கள் வாழும் நாடுகள். அணு மின் நிலையங்கள் கடற்கரை ஓரமாக அமைந்திருப்பதால், எந்தவொரு அணு உலை விபத்தும் அருகிலுள்ள கடற்கரையை ஒட்டிய நாடுகளைத் தாக்கக்கூடும். கதிரியக்கம் கலந்த காற்று வீசும்போது அதைச் சுவாசிப்பவர்கள் அனைவரும் பாதிக்கப்படக் கூடும்.

 ஜப்பான் தனக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவைத் துணிவுடன் எதிர்கொண்டுள்ளது என்பது உண்மை. ஆனால், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, எல்லோரையும் பயமுறுத்தும் அணுக் கதிர்வீச்சு அபாயம் என்று நிலைகுலைந்து போயிருக்கிறது. தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட நகரங்களிலிருந்து வெளியேறி 500 மைல்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள் பலர். ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர். பல்லாயிரக்கணக்கானோரைக் காணவில்லை. கடல் கொண்டதா இல்லை மண்ணுக்கடியில் இயற்கை சமாதி கட்டிவிட்டதா தெரியவில்லை.

 வாழ்ந்து கெட்டவன் என்று நாம் பரிதாபப்படுவோம். விஞ்ஞானம் தரும் எல்லா சுகத்துக்கும் ஆசைப்பட்டவர்கள் ஜப்பானியர்கள். வசதியான வாழ்வு என்று நாம் கருதும் எல்லாமே அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள். ஒரு ஆழிப்பேரலை அத்தனையையும் அழித்துப் பல ஜப்பானியர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது
தகவல் அதிரை M. அல்மாஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.