திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கோடீஸ்வரராக இருந்தால் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கேற்ப முன்னணி கட்சிகளும், கோடீஸ்வர வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் வரை, தேர்தல்களில் போட்டியிட மக்கள் செல்வாக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதில் முக்கிய கட்சிகள் கூட மக்கள் செல்வாக்கு பெற்ற ஏழை வேட்பாளரை நிறுத்தி, அவருக்காக, கட்சி சார்பில் செலவு செய்து, வெற்றி பெற செய்தனர். அதே போல் ஜெயித்து பதவிக்கு வந்தபின்பும் அவர்கள் நடந்தும், சைக்கிளில் சென்றது, குடிசைகளில் வாழ்ந்தது என பல உதாரணங்கள் உள்ளன.முதல்வராக இருந்தவர்கள் கூட மிக சாமன்யராக வலம் வந்ததும், பெரிய அளவில் சொத்து சேர்க்காததும், தமிழக மக்கள் பார்த்ததுண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தேர்தலுக்கும் பணத்துக்கும் அதிக முக்கியத்துவம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்த பின், பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற தோற்றம் தமிழகத்தில் உருவாகியுள்ளது...
இதற்கேற்ப, 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போதும், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாகவே இருந்தனர். அந்த தேர்தலில் ஒரு தொகுதிக்கு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொந்தக்காசை செலவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கே சீட் என்ற நிலை காணப்பட்டது.வேட்பாளர்களும் தேர்தலில் செய்யும் செலவை, வியாபாரத்துக்கு போடும், "முதல்' ஆக கருத தொடங்கிவிட்டனர். போட்ட முதலை, அடுத்த ஐந்தாண்டுக்குள் பல மடங்காக சம்பாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில், தேர்தலில் செலவு செய்ய தயாராகி விடுகின்றனர்.கடந்த தேர்தலுக்காக காட்டப்பட்ட சொத்துக்கணக்குகளே மக்களை மலைக்க செய்துள்ளன. கணக்கில் காட்டப்படாத சொத்துகள் இன்னும் எவ்வளவு இருக்குமோ என்ற எண்ணமும் மக்கள் மனதில் எழாமல் இல்லை.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரை கட்சி நிறுத்தினால், அவருக்காக கட்சி முழு செலவையும் ஏற்று வந்தது. மேலும் அப்போதெல்லாம் தொண்டர்களுக்கு சாதாரண உணவு அளித்தாலே போதும், முழு நேர கட்சிப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தேர்தலில் போட்டியிடவும், தேர்தலை சந்திக்கவும் அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவில் செலவு ஆகாது. ஆனால், தற்போது அதுபோன்று கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களே இல்லை
தொண்டர்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது. பிரியாணியுடன் தினம், 200 ரூபாய் கொடுத்தால் மட்டுமே கட்சிப்பணிகள் நடக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதில் இடையில் நிர்வாகிகளின் சுருட்டல் வேறு. இதனால் கட்சி அளிக்கும் நிதியை விட பல மடங்கு அதிகமாக செலவு செய்யும் வேட்பாளர் அவசியமாகிவிட்டது.
இதை மனதில் வைத்தே தற்போது கட்சிகளும் கோடீஸ்வர வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த தேர்தலில் கோடீஸ்வரர்களின் ஆதிக்கம் இரு மடங்கு அதிகரித்துள்ளது.எம்.ஜி.ஆர்., சாதாரண ஏழை வேட்பாளரை கூட நிறுத்தி, வெற்றி பெறச்செய்துள்ளார். இதை போன்ற சூழல் மீண்டும் திரும்ப வராது. இதனால் நாட்டுக்கு நல்லது செய்ய நினைப்பவர்களுக்கும் எளிமையானவர்களுக்கும் தேர்தல் எட்டாக்கனியாகிவிட்டது
தகவல் அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment