சண்டிகர்: மத்திய அரசு விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றாலும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சிரோமணி அகாலி தளம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பஞ்சாப்பில் சிரோமணி அகாலிதளம்தான் பாஜகவின் நீண்டகால கூட்டணி கட்சி. 2012 சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி வென்றது. ஆனால் 2017 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.
லோக்சபா தேர்தல்களிலும் இதே கூட்டணி நீடித்தது. சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர்சிங் பாதலின் மனைவி ஹர்ஸிமிரத் கவுர் பாதல் மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஆனால் விவசாய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்தது.
3 வேளாண் சட்டங்கள் ரத்து; முழுமையாக நீக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்: சட்ட நிபுணர்கள் கருத்து
பஞ்சாப்பில் அதிருப்தி
அத்துடன் பாஜகவுடனான நீண்டகால கூட்டணியையும் முறித்துக் கொண்டு மத்திய அமைச்சரவையில் இருந்தும் வெளியேறியது. விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள்தான் உக்கிரமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதனால் என்னதான் பாஜகவைவிட்டு விலகினாலும் சிரோமணி அகலிதளம் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
மோடி அறிவிப்பு
இந்நிலையில் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். இதனால் பஞ்சாப்பில் கூட்டணி கணக்குகள் மாறக் கூடும் என கூறப்பட்டு வந்தது. அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் அகாலி தளம் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை
இந்த பின்னணியில் இன்று பிரதமர் மோடியின் அறிவிப்பு மற்றும் கூட்டணியில் மாற்றம் தொடர்பாக சுக்பீர்சிங் பாதலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சுக்பீர்சிங் பாதல், பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை. விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 700 பேர் பலியாகி உள்ளனர். இப்படியான சட்டங்களை கொண்டுவரக் கூடாது என பிரதமர் மோடியிடம் எப்படியெல்லாம் போராடிப் பார்த்தோம். ஆனால் எங்களது பேச்சைக் கேட்காமல்தான் இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அதற்கு மதிப்பளிப்போம் என்றார்.
பாஜகவுக்கு ஏமாற்றம்
சுக்பீர்சிங் பாதலின் இந்த பதில் பாஜகவுக்கு நிச்சயம் பெரும் ஏமாற்றமாகத்தான் இருக்கும். பஞ்சாப்பில் தற்போதைய நிலையில் காங்கிரஸில் இருந்து விலகிய அமரீந்தர்சிங் மட்டும்தான் பாஜகவுடன் கை கோர்க்க தயாராக உள்ளார். அமரீந்தர்சிங்குக்கு செல்வாக்கு இருக்கிறது என பாஜகவும் நம்புகிறது. இந்த நம்பிக்கை என்னவாகும் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லத்தான் போகின்றன என்பது அரசியல் நோக்கர்கள்.
source: oneindia.com
No comments:
Post a Comment