போராட்டக்களத்திலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெளியேறினர். பிடிவாதமாக அங்கேயே இருந்தவர்களை போலீஸ் வெளியேற்ற முயன்றது.
அந்த
நேரத்தில் ராகேஷ் திகைத் கதறி அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டார். 'வேளாண்
சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் நான் தூக்கில் தொங்கி செத்துப் போவேன்.
விவசாயிகளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். எங்கள்
போராட்டத்துக்கு ஆதரவு கொடுங்கள்' என்று கண்ணீருடன் ராகேஷ் பேசிய வீடியோ
வைரலானது. தாங்கள் நேசிக்கும் ஒரு விவசாய சங்கத் தலைவரின் மகன் இப்படி
அழுததைப் பார்த்து பலரும் நெகிழ்ந்தனர். அடுத்த நாள் காலையிலிருந்து
ஆயிரக்கணக்கான உ.பி விவசாயிகள் போராட்டக் களத்துக்கு வந்து குவிந்தனர்.
கிட்டத்தட்ட முடிவுக்கு வர இருந்த போராட்டத்துக்கு இப்படித்தான் உயிர்
கொடுத்தார் ராகேஷ் திகைத். அன்றுமுதல் விவசாயிகள் போராட்டத்தின் முகமாக
மாறியிருக்கிறார் ராகேஷ். 'தாமரைக்கு வாக்களித்தது எங்கள் தவறு. இம்முறை
அதைச் செய்ய மாட்டோம்' என உத்தரப் பிரதேசத்தில் அவர் செய்யும் பிரசாரம்,
அங்கு பா.ஜ.க-வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும்
சில மாதங்களில் தேர்தல் வரும் சூழலில், எரியும் போராட்ட நெருப்பை அணைக்க
முயல்கிறார் மோடி. அதன் விளைவே இந்த வாபஸ் அறிவிப்பு.
இப்போதும்கூட,
'நாடாளுமன்றத்தில் முறைப்படி வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும்வரை நாங்கள்
வெளியேற மாட்டோம்' என்று ராகேஷ் திகைத் முழங்குகிறார்.
டெல்லியில் ஒரு
சாதாரண கான்ஸ்டபிளாக வாழ்க்கையைத் தொடங்கிய ராகேஷ் திகைத்தை தேசம் அறிந்த
விவசாயிகள் தலைவராக மாற்றியிருக்கிறது மோடி அரசு.
- அகஸ்டஸ்
No comments:
Post a Comment