டெல்லி: கோடநாடு வழக்கு தொடர்பான விசாரணைகள் தற்போது சூடு பிடித்து உள்ளது. தனது ஆட்சிக்கு கீழேயே கோடநாடு வழக்கு விசாரணையை முடிக்கும் நல்ல வாய்ப்பை எடப்பாடி பழனிச்சாமி தவறவிட்டு இருக்கிறார். இதுவே தற்போது இவருக்கு எதிராக திரும்பும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
கோடநாடு வழக்கு தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் இரண்டும் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயன் மீது தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா இருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இங்கு அடிக்கடி தங்குவது வழக்கம். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி வரும் போதெல்லாம் முதல்வர் இல்லத்திற்கு இணையான பாதுகாப்போடு இந்த பங்களா பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் இங்கு பெரிய அளவில் பாதுகாப்பு பணிகள் செய்யப்படுவது இல்லை.
ஜெயலலிதா மறைவிற்கு பின் பெரிதாக பயன்பாடு இன்றி இந்த பங்களா பாதுகாப்பு இன்றி இருந்தது. இங்கு இருந்த 20க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்களில் சில கேமராக்கள் சரியான பயன்பாட்டிலும் இல்லை. இந்த நிலையில் கடந்த 2017ல் இங்கு பெரிய கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றது.2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கோடநாடு விவகாரம்: பழிவாங்கும் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி
கொலை
இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு சினிமாவில் காட்டப்படுவது போல பல திருப்பங்களுடனும், புதிர்களுடனும் நகர்ந்து சென்றது.இதையடுத்து சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் புகார் வைக்கப்பட்டது. சயன், மனோஜ், கனகராஜ் ஆகிய மூன்று பேரும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டனர்.
கனகராஜ்
முக்கியமான குற்றவாளி கனகராஜ்தான். ஆனால் இவர் விபத்தில் பலியானார். அதோடு சயனும் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார். இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பேசாவிட்டாமல் செய்ய கொலை முயற்சிகள் நடக்கிறதோ என்றும் பலர் சந்தேகங்களை எழுப்பி இருந்தனர். இந்த வழக்கில் சயனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சயானை தொடர்ந்து மனோஜிற்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான் தற்போது சயன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
உண்மை
சயனை போலீசார் மீண்டும் விசாரித்து வருகின்றன. புதிய விசாரணையில் பல உண்மைகள் வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சொல்லித்தான் நான் இப்படி செய்தேன். கனகராஜுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருக்கிறது, என்று சயன் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் பரவி வருகின்றன. இதனால்தான் தற்போது சயன் மீதான விசாரணையை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 4 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கு தற்போது எடப்பாடி பழனிசாமிக்கே எதிராக திரும்பி வருகிறது.
எதிராக உள்ளது
4 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கை முன்பே முடித்து இருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு இப்படி சிக்கல் ஏற்பட்டு இருக்காது. ஊட்டி நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. 2 முறை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு முன்பாக வழக்கை விசாரித்து முடித்து இருந்தால் பெரிய பிரச்சனை, அழுத்தம் அதிமுக தரப்பிற்கு இருந்திருக்காது. ஆனால் வழக்கை எடப்பாடி பழனிச்சாமி விரைந்து முடிக்க நடவடிக்கை எதுவும் அப்போது எடுக்கவில்லை.
ஆட்சி மாற்றம்
இறுதிக்கட்ட விசாரணையிலேயே வழக்கு இருந்த போது ஆட்சி மாறிவிட்டது. 4 வருடத்தில் வழக்கை விசாரித்து முடித்து இருந்தால் திமுக அரசு மீண்டும் அந்த வழக்கை எடுத்து, நீதிமன்ற அனுமதியோடு மறு விசாரணை நடத்துவது கொஞ்சம் கஷ்டம் ஆகி இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது வழக்கை முடித்து வைக்கும் வாய்ப்பை தவற விட்டதால் திமுக அரசு இந்த வழக்கை கெட்டியாக பிடித்துக்கொண்டு விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment