அண்மையில் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தேர்தலுக்கு முன்பான வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதாக நிதியமைச்சர் சொல்லியிருந்தார். அதில் மிக முக்கியமான வாக்குறுதி பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு. பெட்ரோல் மீதான வரி 3 ரூபாயாகக் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவைதான் எளிய உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து முறை. பெட்ரோல் விலை உயர்வால் இவர்களின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவுக்குக் குறைக்கிறோம்" என்றார்.
இந்த விலைக்குறைப்பு அன்று நள்ளிரவே நடைமுறைக்கு வந்தது. இது வரவேற்பை பெற்றாலும் 5 ரூபாய் குறைப்பதாக சொல்லிவிட்டு வெறும் 3 ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்தன. அதேபோல டீசல் விலை ஏன் குறைக்கப்படவில்லை எனவும் கேள்வியெழுப்பினர். பட்ஜெட் மீதான மூன்று நாள் விவாதத்தின் போதும் இதுகுறித்து கேள்வியெழுப்ப நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார்.
இச்சூழலில் இன்று இதுதொடர்பாக பேரவையில் பேசிய அவர், “பெட்ரோல் விலை குறைப்பால் மக்கள் பயனடைந்துள்ளதை அறிய முடிகிறது. புள்ளிவிவரங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. பெட்ரோல் விலை குறைப்பு பொருளாதார நிபுணர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 11.28 லட்சம் லிட்டம் பெட்ரோல் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இது மக்களுக்கு மிகுந்த பயனுள்ள விலைக்குறைப்பாக மாறியிருப்பது இதன்மூலம் தெரியவருகிறது” என்றார்.
No comments:
Post a Comment