கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் இனி கொரோனா நோயாளிகளை வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிய நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மையங்களுக்கும், வீட்டு தனிமைப்படுத்துதலுக்கும் நோயாளிகளை பிரித்து அனுப்பும் வகைப்படுத்தும் மையம், கன்கார்டியா பள்ளியில் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 1,500-லிருந்து படிப்படியாக குறைந்து, கடந்த சில நாட்களாக 100-க்கும் கீழாக பதிவாகி வருகிறது. இதனால், குமரி அரசு மருத்துவமனையில் தற்போது 200-க்கும் மேற்பட்டோர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கோணம் அரசு பொறியியல் கல்லூரி, மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி கொரோனா சிகிச்சை மையங்களை தவிர, பிற மையங்கள் மூடப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி, குமரி மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வீட்டு தனிமை என மொத்தமாக 1,496 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதனால், கன்கார்டியா பள்ளியில் செயல்பட்டு வந்த வகைப்படுத்தும் மையம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் முதல் செயல்படத் தொடங்கியது.
இந்த நிலையில், வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களில் சிலர் வெளியே சுற்றுவதால் தொற்று பரவுவதாக புகார் எழுந்ததை அடுத்து, நோயாளிகள் யாரையும் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும், அனைவரையும் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் ஆட்சியர் அரவிந்த் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் கொரோனா நோயாளிகள் அனைவரும் இனி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment