
மத்திய பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அரசு சார்பில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை, தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்தார்.
நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டப்படுத்த கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக டெல்லி உள்பட பல மாநிலங்களில் சில நாட்கள் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த 7ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று தெரிவித்தார்.
இதன்படி, மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் புதிய நடைமுறை கடந்த திங்கட்கிழமையன்று நடைமுறைக்கு வந்தது. மேலும் அன்று முதல் மத்திய அரசின் இலவச உலகளாவிய தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டது. அன்றைய தினம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 82 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது. இதற்கு முன் ஏப்ரல் 2ம் தேதியன்று அதிகபட்சமாக 42.65 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று நம் நாட்டில் மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 16.6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாள் (நேற்று முன்தினம்) அந்த மாநிலத்தில் 5 ஆயிரம் பேருக்கும் குறைவாகவே தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதுவும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பிரதேசத்தில் தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ளதை குறிப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திங்கட்கிழமை எண்கள் திருத்தப்பட்டுள்ளன (போலி) என குற்றம் சாட்டினார். ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், அரசாங்கம் மக்களை முட்டாளாக்குகிறதா என்று கேட்டார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் விளக்கம் அளித்துள்ளார். விஸ்வாஸ் சாரங் கூறுகையில், கடந்த திங்கட்கிழமையன்று (ஜூன் 21) நாங்கள் ஒரு மெகா தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை ஏற்பாடு செய்தோம். செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) எங்கள் தடுப்பூசி நாள் அல்ல. நீங்கள் பேசும் தரவு (நேற்று முன்தினம் 5 ஆயிரத்துக்கும் குறைவான நபர்களுக்கு தடுப்பூசி) தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே நடந்தது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment