
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் பிறந்து, புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக உருவெடுத்த காஸியஸ் கிளே, தனது பெயரை 'முகமது அலி' என்று மாற்றிக்கொண்ட நாள் மார்ச் 6, 1964.
அமெரிக்காவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக இருந்தவர் காஸியஸ் கிளே. 1960-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதால் அமெரிக்க மக்களிடையே புகழ்பெற்றவராக இருந்தார். அதே நேரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களுக்கு எதிராக நடந்த சில இனவெறி சம்பவங்கள், அவரது மனதை பாதித்தன. நாட்டுக்காக தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுத்தாலும், தன்னை வெள்ளையின மக்கள் இனவெறிக் கண்களுடன் பார்த்ததால் அவர் வருத்தினார்.
இத்தகைய சூழலில் 1964-ம் ஆண்டு முஸ்லிமாக மாறிய காஸியஸ் கிளே, தனது பெயரை 'முகமது அலி' என்று மாற்றிக்கொண்டார். மார்ச் 6-ம் தேதி அவர் இதை அறிவித்தார். 'நான் அடிமையாக இருந்தபோது எனக்கு இருந்த பெயர்தான் காஸியஸ் கிளே. இப்போது நான் முகமது அலி. சுதந்திரமான மனிதன் ' என்று முழங்கினார். மால்கம் எக்ஸ் என்பவரின் வழிகாட்டுதல்படி அவர் மதத்தையும், தன் பெயரையும் மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
முகமது அலியின் இந்தச் செயல் ஒரு பிரிவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. காலமும் காஸியஸ் கிளே என்ற பெயரை மறந்து முகமது அலி என்ற பெயரிலேயே அவரைக் கொண்டாடியது. அதே நேரத்தில் முகமது அலி தனது பெயரை சட்டபூர்வமாக மாற்றவில்லை என்றும், பல பத்திரங்களில் அவரது பெயர் காஸியஸ் கிளே என்றே இருந்தது என்றும் 2016-ம் ஆண்டில் 'யுஎஸ்ஏ டுடே' இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
No comments:
Post a Comment