
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செப்பாட் பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமையான செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் உள்ளது. இது கி.பி. 1050-ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்நிலையில் தேவாலயம் அமைந்துள்ள சாலை விரிவாக்க பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) செய்து வந்தது. இதனால் சாலையோரம் உள்ள தேவாலயத்தை இடிக்க நெடுஞ் சாலை துறை முடிவு செய்தது.
ஆனால் இதை இடிப்பதற்கு தேவாலய நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தேவாலயத்தை இடிக்கும் உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்று மாநிலத்தை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் (எல்டிஎஃப்), எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (யுடிஎஃப்) தேவாலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
ஆனால் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த விவரத்தை அறிந்த கேரள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.பாலசங்கர், பிரச்சினையில் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார். மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார் பாலசங்கர். அதன்படி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் (ஏஎஸ்ஐ) தேவாலயத்தைப் பார்வையிட்டு இது ஆயிரம் ஆண்டு கால பழமையானதுதான் என்று சான்றளித்தனர். தேசிய நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தேவாலயத்தை இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஆயிரம் ஆண்டு கால பழமையான தேவாலயம் காப்பாற்றப்பட்டது.
இதுகுறித்து தேவாலயத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஜான்ஸ் ஆப்ரஹாம் கோனட் கூறும் போது, 'இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யார் யாரிடமோ நாங்கள் வேண்டுகோள் வைத்தோம். ஆனால் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் எங்களைக் கைவிட்டுவிட்டனர். ஆனால் பாஜகதலைவரான பாலசங்கர் உடனடியாக எங்களுக்கு உதவி செய்து தேவாலயம் இடிபடுவதைத் தவிர்த்தார்.
இது கி.பி.1050-ம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயமாகும். இந்த தேவாலயத்தில் 13-ம் நூற்றாண்டின் 47 சுவரோவியங்கள் உள்ளன. மேலும் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, தேவாலயத்தின் தலை வராக இருந்த மலங்கரா மெட்ரோபாலிட்டன் பிலிப்போஸ் மர் டயனிசியஸ் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேவாலயத்தைக் காப்பாற்றிய பாலசங்கருக்கு கடமைப்பட்டுள்ளோம். அவர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் செங்கனூர் தொகுதியில் போட்டி யிடுவதாக அறிகிறோம்.
அவர் போட்டியிடும்பட்சத்தில் அவருக்கு கிறிஸ்தவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களிக்காமல் போனால்நாம் நன்றி மறந்தவர்களாகி விடுவோம். எனவே கிறிஸ்தவர்கள் அனைவரும் பாலசங்கருக்கு ஆதரவு தரவேண்டும் என்று மலங்கரா ஆர்த்தோடாக்ஸ் சிரியன் தேவாலயத்தின் தலைவர்பசிலியோஸ் மார்த்தோமா பவுலோஸ்-2 கேட்டுக்கொண்டுள்ளார்" என்றார்.
No comments:
Post a Comment