
திமுக கூட்டணியில் மதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது. குறைந்தது 10 தொகுதியாவது வேண்டும், தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என மதிமுக கோரிக்கைவிடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் திமுக நிர்வாகிகளே மதிமுக அலுவலகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த அளவுக்கு பேச்சுவார்த்தை நீடித்தது.
இந்த நிலையில் நேற்றிரவு மதிமுகவுடன் தொகுதி பங்கீடு இறுதியானது. திமுக கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது என்றும் முடிவானது. இதற்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.

இதன்பிறகு, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து வைகோ கூறியதாவது: திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 6 தொகுதிகளிலும் தனித் தனி சின்னத்தில் போட்டியிடுவதற்கான நடைமுறை சாத்தியம் இருப்பதால் அதை உணர்ந்து இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சனாதன ஹிந்துத்வ சக்திகளைத் தடுத்து நிறுத்துவதற்காக திமுகவுக்கு முழு ஆதரவைத் தருவோம். கருணாநிதி உடல்நிலை குன்றி இருந்தபோது, உங்களுக்கு எப்படி பக்கபலமாக இருந்தேனோ அதேபோல் ஸ்டாலினுடனும் துணை நிற்பேன் என அவரிடம் உறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக திமுகவோடு கைகோர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிகச் சிறந்த தலைசிறந்த முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினைப் பார்க்கிறோம் என வைகோ கூறினார்.
newstm.in
No comments:
Post a Comment