
திருப்பூர்:வட்டிச் சலுகை திட்டத்தை அடுத்த மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு
செய்யவேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், மத்திய அரசிடம்
கோரிக்கை விடுத்துள்ளது.உலகளாவிய ஆடை வர்த்தகத்தில் நிலவிவரும் போட்டிகளை
எதிர்கொள்வதற்கு, மத்திய அரசு வழங்கும் பல்வேறு வகை சலுகைகள், இந்திய ஆயத்த
ஆடை ஏற்றுமதி துறையினருக்கு கைகொடுத்து வருகிறது.வெளிநாட்டு
வர்த்தகர்களிடம் இருந்து ஆர்டர் பெறும் நிறுவனங்கள், ஆடை உற்பத்திக்காக,
வங்கிகளில் கடன் பெறுகின்றன. இவ்வாறு பெறப்படும் கடன்களுக்கு, ஒன்பது முதல்
11 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்கப்படுகிறது.மத்திய அரசு, ஆயத்த ஆடை
ஏற்றுமதி நிறுவனங்கள் பெறும் 'பேக்கிங் கிரெடிட்' கடன் மீதான வட்டிக்கு,
சலுகை வழங்குகிறது.
பெரிய நிறுவனங்களுக்கு, வட்டியில் மூன்று சதவீதம்; குறு,
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, ஐந்து சதவீதம் வரை வட்டி தள்ளுபடி
செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதனால்,
ஏற்றுமதி நிறுவனங்களுக்கான வட்டி சலுகை திட்டம், ஓராண்டுக்கு நீட்டிப்பு
செய்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் மார்ச் மாதத்துடன் வட்டி சலுகை
திட்ட காலம் முடிவடைய உள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில்,
மத்திய நிதி, வர்த்தகம், ஜவுளி அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:கொரோனா
பாதிப்புகளிலிருந்து, திருப்பூர் பின்னலாடை துறை எழுச்சி பெற்றுவருகிறது.
இக்கட்டான காலங்களில், மத்திய அரசு, கைகொடுத்து உதவியதாலேயே இது
சாத்தியமாகியுள்ளது.கடந்த 2015 -2020ம் ஆண்டு வரையிலான வட்டி சலுகை
திட்டம், கடந்த ஆண்டு, மார்ச்சில் நிறைவடைந்தது; கொரோனா பரவல் காரணமாக,
ஓராண்டுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது; வரும் மார்ச் மாதம், நிறைவடைய
உள்ளது.கொரோனாவால், நிறுவனங்களின் நிதி நிலை பாதிக்கப்பட்டுள்ளது; ஆடை
உற்பத்திக்கு, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதிகளவு நடைமுறை மூலதனம்
தேவைப்படுகிறது.வங்கி கடன்களே, நிறுவனங்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய
ஆதாரமாக உள்ளன. வட்டி சலுகை மூலம், கடன்களுக்கான வட்டி குறைக்கப்பட்டு,
நிறுவனங்களுக்கு ஏற்படும் சுமைகள் குறைக்கப்படுகிறது. பிற நாடுகளுடனான
போட்டிகளை எதிர்கொள்ள, இந்த திட்டம் மிகவும் உறுதுணையாக உள்ளது.ஆயத்த ஆடை
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கைகொடுத்துவரும் இந்த வட்டி சலுகை திட்டத்தை,
மத்திய அரசு, மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து உடனடியாக அறிவிப்பு
வெளியிடவேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment