
கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை ரேஸ்கோர்ஸ் சந்திப்பில்,
மக்களை கிறங்கடிக்கும் வகையில், 'லைட்டிங் டவர்' அமைக்க, மாநகராட்சி
திட்டமிட்டுள்ளது.கோவை ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலை, 3.5 கி.மீ., சுற்றளவு
கொண்டது; ரோட்டின் இருபுறமும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.40.70
கோடியில் மேம்படுத்தப்படுகிறது.'வாக்கிங்' தளம் சீரமைக்கப்படுவதோடு, நடந்து
செல்வோர் எவ்வளவு துாரம் கடந்திருக்கிறோம் என்பதை அறியும் வகையில்,
'டிஜிட்டல் மீட்டர்' பொருத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.சிறுவர்களுக்கான
விளையாட்டு கூடம், பூங்கா, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பிரத்யேக
உடற்பயிற்சி கூடங்கள், முதியோர் ஓய்வெடுக்க இருக்கை வசதி ஏற்படுத்தப்பட
உள்ளது.இதுதவிர, டிஜிட்டல் யோகா சென்டர் உருவாக்கப்படும்; டிஜிட்டல்
போர்டில் யோகாசனங்கள் காண்பிக்கப்படும். இதை பார்த்து, எளிய முறையில்
பொதுமக்கள் யோகாசனம் செய்ய பழகலாம்.
ரேஸ்கோர்ஸ் சந்திப்பு பகுதியில், வாகன போக்குவரத்து
அதிகமாக இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அங்கு, சுதந்திர
போராட்ட தியாகி சி.சுப்ரமணியம் சிலை இருக்கிறது; தற்காலிகமாக அகற்றி
விட்டு, வெளிநாட்டில் இருப்பதுபோல், 40 அடி உயரத்தில், பிரமாண்டமாக
'லைட்டிங் டவர்' உருவாக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. அனிமேஷன் முறையில்
ஒளி அமைப்பு, இயற்கை காட்சிகளை ஒளிக்காட்சியாக தெரியும் வகையில் வடிவமைக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ரேஸ்கோர்ஸ்
சந்திப்பில் இருந்து தற்காலிகமாக, சி.சுப்ரமணியம் சிலை அகற்றப்படும்.
லைட்டிங் டவர் அமைத்ததும், மீண்டும் சிலை நிறுவப்படும். சிலையை அகற்ற,
கலெக்டரிடம் அனுமதி பெறப்படும். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் கடிதம்
வாயிலாக, தகவல் தெரிவிக்கப்படும்' என்றனர்.வரப்போகின்றன இந்த வசதிகள்!
'வாக்கிங்' துாரம் அறிய 'டிஜிட்டல் மீட்டர்'. சிறுவர் விளையாட்டு பூங்கா.
ஆண், பெண்ணுக்கு தனி ஜிம். முதியோர் ஓய்வெடுக்க இருக்கை வசதி. டிஜிட்டல்
போர்டில் யோகா பயிற்சி.
No comments:
Post a Comment