
தமிழகத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் வடமாநில அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதையடுத்து, பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) நிர்வாகம் தமிழகத்தில் பணியாற்றும் இதர மாநில அலுவலர்களுக்கு தமிழ் மொழி குறித்துஅடிப்படை பயிற்சி அளிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் உதவியை நாடியது.
இதைத் தொடர்ந்து, ஐஓபிஅலுவலர்கள், ஊழியர்கள் என 6 ஆயிரம் பேருக்கு தமிழ் மொழி குறித்து தொலைதூரக் கல்வி நிறுவனம் வாயிலாக இணையவழியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி நேற்று தொடங்கி வைத்தார். பயிற்சி குறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பல்வேறு வங்கிக் கிளைகளில் பணியாற்றும் பிற மொழி அலுவலர்களுக்கு பேச்சுத் தமிழ் மட்டுமின்றி, தமிழர்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், விருந்தோம்பல் குறித்தும் சொல்லித் தரப்படும். வாடிக்கையாளர்களிடம் தமிழில் அன்போடு எப்படி பேச வேண்டும் என்பதும் கற்றுத் தரப்படும் என்றார்.
பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவன இயக்குநர் ரவிச்சந்திரன் கூறும்போது, "இணையவழியில் ஒவ்வொரு ஞாயிறும் இப்பயிற்சி நடைபெறும். ஒவ்வொருவருக்கும் மொத்தம் 22 மணி நேரம் என்ற அளவில் பயிற்சிஇருக்கும். ஒரு பிரிவுக்கு 250 பேர் என 6,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி நிறைவில் மதிப்பீடு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்" என்றார்.
பயிற்சி அமைப்பாளரான தமிழ் பேராசிரியை எம்.சற்குணவதி கூறியபோது, "பேச்சுத் தமிழ் பயிற்சியுடன் வங்கிச் சேவை, தொழில்நுட்பம், போக்குவரத்து, வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தொடர்பான முக்கியமான தமிழ்ச் சொற்களும் வங்கி அலுவலர்களுக்கு சொல்லித் தரப்படும்" என்றார்.
No comments:
Post a Comment