
சண்டிகர்: விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு கூறுவது வருந்தத்தக்கது என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்
விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதிலும் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்றும் அவர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
நரந்திர சிங் தோமரின் இந்தக் கருத்துக்கு எதிராக விவசாயச் சங்க தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்திர சிங் கூறுகையில்,"பஞ்சாப் அரசு மட்டும் சுமார் 102 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது. நிலைமை இப்படி இருக்க மத்திய அமைச்சரின் கருத்தோ பொறுப்பற்ற வகையில் உள்ளது" என்று விமர்சித்தார்.
பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர்... பதறிடியத்தபடி கால் செய்த பிரதமர் மோடி
தொடர்ந்து பேசிய அவர், "விவசாய சட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்த மத்திய அரசு எட்டு கோடி ரூபாய் செலவு செய்கிறது. ஆனால், தங்கள் உரிமைகளுக்காகப் போராடி உயிரைத் தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று கூறுவது என்பது வருந்தத்தக்கது" என்றார்.
முன்னதாக, போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார். அதேபோல போராட்டத்தில் எத்தனை விவசாயிகள் உயிரிழக்கிறார்கள் என்பது குறித்து தகவல்களும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்தை மிகக் கடுமையாக விமர்சித்த அமரீந்திர சிங், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது இருப்பினும் எத்தனை விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தார்கள் என்ற தகவல்களைக்கூட மத்திய அரசு முறையாகச் சேகரிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
source: oneindia.com
No comments:
Post a Comment