பட்டினப்பாக்கத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். சிறுமியின் சாமர்த்தியத்தால் கடத்தல் கும்பலின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
சென்னை பட்டினப்பாக்கம் ராஜா தெருவில் நேற்று முன்தினம் குழந்தைகள் சிலர் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் இருவர் கையிலும் நிறைய கைக்குட்டைகள் இருந்துள்ளன. இருவரும் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடலாம் எனக்கூறி கையில் இருந்து கர்சீப்பைக் கொண்டு கண்களைக் கட்டி ஆட்டோவுக்குள் வருமாறு அழைத்துள்ளனர். அதில் ஒரு சிறுமிக்கு மட்டும் இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட, வீட்டுக்குள் ஓடி தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வரவே அதைப் பார்த்து பயந்துபோன அவர்கள் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து குழந்தைகளின் பெற்றோர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பட்டப்பகலில் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கடத்த வந்த கும்பல் குறித்து பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் சாமர்த்தியத்தால் கடத்தல் கும்பலிடம் இருந்து மற்ற குழந்தைகளும் தப்பினர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பட்டினப்பாக்கம் போலீஸார், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் ஆட்டோவில் வந்தவர்கள் உருவமும், ஆட்டோவும் பதிவாகியிருந்தது. அதை வைத்து ஆட்டோவில் வந்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment