
புதுடில்லி: அடுத்த சில மாதங்களில், தமிழகம், புதுச்சேரி, அசாம்,
மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஹிந்தி
மொழி அல்லாமல், பிராந்திய மொழிகள் பேசப்படும் இந்த மாநிலங்களில், பிரசாரம்
மேற்கொள்வது, தேசிய தலைவர்களுக்கு மிகவும் சவாலான காரியமாக
பார்க்கப்படுகிறது.பிரசாரத்தின்போது, தேசிய தலைவர்களால் பிராந்திய
மொழிகளில் பேச இயலாது என்பதால், அவர்களது உரையை, கட்சியின் மூத்த
தலைவர்கள், உள்ளூர் மொழியில் மொழிபெயர்த்து, மக்களிடம் எடுத்துரைப்பர்.
மொழிபெயர்ப்பாளர்கள் தவறாக மொழிப்பெயர்த்து கூறினால், அது சிக்கலாகிவிடும்.
இதுபோன்ற பல சம்பவங்கள், கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளன.2019ல்,
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல், 'தமிழக மக்கள் மீது
மரியாதை வைத்திருக்கிறோம்' என, கூறினார்.
அதை மொழிபெயர்த்த மூத்த தலைவர் தங்கபாலு, 'தமிழக மக்களின்
எதிரி, பிரதமர் மோடி' என தவறாக கூறினார்.இதேபோல், தமிழகத்தின் தாராபுரம்
மாவட்டத்தில், சமீபத்தில் பிரசாரத்தின்போது பேசிய ராகுல், 'நாக்பூரில் உள்ள
'நிக்கர்வாலாஸ்' எனப்படும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரால், தமிழகத்தின்
எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது' என கூறினார். அதை மொழிபெயர்த்த மூத்த
தலைவர் ஒருவர், 'தமிழகத்தின் எதிர்காலத்தை, நாக்பூரில் உள்ள மது
வியாபாரிகளால் தீர்மானிக்க முடியாது' என, கூறினார்; இது, கடும்
விமர்சனத்திற்கு உள்ளானது.கடந்த, 2018ல், கர்நாடகாவில் பிரசாரம் செய்த
அமித் ஷாவின் உரையை, தற்போதைய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மொழி
பெயர்த்தார். அப்போது, பிரகலாத் ஜோஷி, 'ஏழை மற்றும் தலித் சமூக மக்களுக்கு,
நரேந்திர மோடி எதுவும் செய்யமாட்டார்' என, தவறாக மொழிபெயர்த்தார்; இது,
பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.அதே ஆண்டு, தமிழகத்தில் அமித் ஷா
பேசுகையில், 'சொட்டு நீர் பாசனத்திற்காக, மத்திய பா.ஜ., அரசு, 332 கோடி
ரூபாயை ஒதுக்கி உள்ளது' என, கூறினார். இதை மொழிபெயர்த்த எச்.ராஜா, சிறுநீர்
பாசனத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்; இது, சமூக வலை
தளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதுபோன்ற பல நகைச்சுவையான
சம்பவங்களை, வரும் மாதங்களில் நடக்கும் பிரசாரங்களின்போது நாம்
எதிர்ப்பார்க்கலாம்.
No comments:
Post a Comment