
சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தை கைப்பற்றியபோது தவறாக கணக்கிட்டு, கூடுதலாக பதிவிட்டிருக்கலாம் என்று சிபிஐ அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தங்கம் இறக்குமதி செய்யும் சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2012-ம் ஆண்டு சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் அதே நிறுவனத்தின் லாக்கர்களில் வைத்து சீலிடப்பட்டது. இதற்கிடையில், வங்கிகளில் சுரானா நிறுவனம் வாங்கிய கடனுக்கு ஈடாக, சிபிஐ கட்டுப்பாட்டில் இருக்கும் தங்கத்தை வங்கிகள் கேட்க, நீதிமன்றமும் அதற்கு சம்மதம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேல், சுரானா நிறுவனத்துக்கு சென்று தங்கத்தை எடை பார்த்தார். எஸ்பிஐ வங்கி மேலாளர்கள் 2 பேரும் உடன் சென்றனர். அப்போது, 296 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103 கிலோ தங்கத்தை காணவில்லை. இதுகுறித்த வழக்கை சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தங்கம் மாயமானதை கண்டுபிடித்த சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேல், உடன் சென்ற 2 வங்கி மேலாளர்கள், சுரானா நிறுவன ஊழியர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடந்தது.
சாவிகள் மூலமாகவே திறந்து தங்கம் திருடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட சாவிகளை எடுத்து வந்தோ அல்லது மாற்று சாவிகளை பயன்படுத்தியோ தங்கம் திருடப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்று தடயவியல் சோதனையில் தெரியவந்தது. ஆனால், தாங்கள் ஒரு சாவி மட்டுமே தயாரித்துக் கொடுத்ததாக லாக்கர் தயாரித்த நிறுவனமும் தெரிவித்துவிட்டது. இதனால், வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டபோது இருந்த சிபிஐ அதிகாரிகள், சுரானா நிறுவன அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரித்தபோது, தங்கத்தை கைப்பற்றியபோது, தவறாக எடை பார்த்திருக்கலாம். அதனால், 103 கிலோ தங்கத்தை கூடுதலாக பதிவிட்டிருக்கலாம் என்று ஒரு சிபிஐ அதிகாரி உட்பட 2 அதிகாரிகள் வாக்குமூலம் கொடுத்திருப்பது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் தங்கம் திருடுபோனதா அல்லது தவறாக கணக்கிடப்பட்டதா என்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment