
மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 42வது நாளாக நீடித்து வருகிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியுற்ற நிலையில் நாளை மறுநாள் 8ம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசின் ஆணவமும், அக்கறையின்மையும் காரணமாக, இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதற்குப் பதிலாக, கண்ணீர்புகை குண்டுகளால் தாக்கிடுவதாகவும், தங்களின் நட்புக்குரிய தொழில் முதலாளிகளின் நலன்களைக் காக்கவே, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறமால் முரண்டு பிடித்திடுவதாகவும் ராகுல்காந்தி சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "உழவினார் கைம்மடங்கின் இல்லை" - என்ற திருக்குறளை சுட்டிக்காட்டியுள்ள அவர், விவசாயிகளின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது எனவும், இறுதியில் விவசாயிகளே வெற்றி பெறுவர் எனவும் கருத்து பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment