
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அசோக் பகத்(27), தன் மனைவி சுமதி குமாரி, 8 வயதான மகன் அபய், 4 வயதான மகள் ரேஷ்மா ஆகியோருடன் தங்கி பணியாற்றி வந்தார்.
வழக்கம் போல தம்பதி பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளனர். ஆனால் மறுநாள் காலை விடிந்து வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீட்டில் சுமதி குமாரி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். அவரது மகனும் உயிரிழந்து கிடந்தார். உடனடியாக கொலக்கம்பை போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு அப்பெண்ணின் கணவர் அசோக் பகத்தை தேடினர். அப்போது வீட்டின் அருகேயிருக்கும் மற்றொரு வீட்டில் அசோக் பகத் துாக்கிட்டுத் தொங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. அத்துடன் வீட்டருகில் இருந்த குடிநீர் தொட்டியில் ரேஷ்மாவின் சடலமும் மிதந்தது.

நான்கு பேரின் சடலங்களை மீட்ட போலீசார், உடற்கூறாய்விற்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த கொலக்கொம்பை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், தம்பதி இடையே குடும்பத் தகராறு இருந்ததும் அதனால் இருவரும் அடிக்கடி சண்டை, தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. குடும்பச் சண்டையில் ஆத்திரமடைந்த அசோக் பகத், மனைவி குழந்தைகளைக் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனினும் அவர்கள் கொலை மற்றும் தற்கொலையில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in
No comments:
Post a Comment