
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி 307 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. மதுரையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புனேவில் உள்ள செரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்து வரும் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகளை அவசர நிலைக்கு பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) கடந்த 3-ம் தேதி அனுமதி வழங்கியது.
இதையடுத்து தடுப்பூசி போடும்பணியை தொடங்குவது குறித்து கடந்த 9-ம் தேதி டெல்லியில் பிரதமர் தலைமையில் உயர்நிலைஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வரும் 14 முதல் 15-ம் தேதி வரை பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இந்த பண்டிகைகள் முடிந்து வரும்16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, இந்தியா முழுவதும் கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி வரும் 16-ம் தேதிதொடங்கப்படுகிறது. முதல்கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.
தமிழகத்தில் 307 இடங்கள்உட்பட நாடு முழுவதும் 5 ஆயிரம்இடங்களில் தடுப்பூசி போடும் பணிதொடங்க முடிவு செய்யப்பட்டுள் ளது. கரோனா தொற்று தடுப்பூசி போடுவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர்நரேந்திரமோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படவுள்ள 6 சுகாதாரப் பணியாளர்களின் விவரங்கள் மத்திய சுகாதாரத் துறை உருவாக்கியுள்ள 'கோவின்' செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் சேமித்துவைக்கும் கிடங்குகள், தடுப்பூசி போடப்படும் இடங்கள், தடுப்பூசிகளை கொண்டு செல்லும் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்து தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் வரும் 16-ம் தேதி மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். பின்னர் மதுரையில் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தையும் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, 'முதல்வர் எங்கு தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்ற விவரம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. பிரதமருடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்கு பின்னரே தெரியவரும்' என்றார்.
No comments:
Post a Comment