
சட்டத்தை மீறி, திமுகவினர் நடத்தும் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி இல்லை என தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக நிர்வாகிகள் கிராம சபை கூட்டத்தை நடத்தினர். அப்போது, மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பார் என திமுக தலைமைக் கழகம் நேற்று மாலை அறிவித்தது. இந்நிலையில், கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடத்துவதற்கு, யாருக்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு நேற்று இரவு அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து, திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி கேட்டு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான், மரக்காணம் காவல்நிலையத்தில் மனு அளித்தார். ஆனால், கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி இல்லை என காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
இருப்பினும் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment