
மக்கள் கிராம சபைக்கும் தடை விதித்தாலும் தொடர்ந்து நடத்துவோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் இன்று (டிச. 25) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:
"மரக்காணம் எனக்கு மறக்க முடியாத ஊராக அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் விழுப்புரம் மாவட்டத்தில்தான் முதல் முதலில் மாநாட்டுக்கு தலைமையேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. நெருக்கடி நிலையின் போது என்னை கைது செய்ய காவல் துறையினர் சென்னையில் உள்ள எங்கள் வீட்டுக்கு சென்றபோது, நான் திண்டிவனம், செஞ்சியில் நாடகம் நடத்தி வந்தேன்.
கிராமசபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு, திட்டமிட்டு அதிமுக அரசு குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறது. இதனால் 'மக்கள் கிராம சபை' என்ற பெயரில் கூட்டம் நடத்துகிறோம். பயந்து பெயரை மாற்றியதாக நினைக்கக்கூடாது. மக்கள் சபை கூட்டத்திற்கு தடை விதித்தால் அதையும் கடந்து நடத்துவோம். மோடியே வந்தாலும் தடுக்க முடியாது. அரசியலில் குடும்பம் இருக்கலாம். ஊழல் குடும்ப கட்சியினர் இருக்கக்கூடாது. எடப்பாடி பழனிசாமியின் குடும்பம் ஊழல் செய்துவருகிறது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை சந்திக்கும் கட்சி திமுகதான்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் குறைகளை என்னிடம் சொல்லியுள்ளீர்கள். ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகதான் ஆளும்கட்சியாக இருந்துவருகிறது. நாம் சொல்வதை ஆளும்கட்சி செய்துவருகிறது. எந்த அரசியல் கட்சியும் உலக அளவில் இப்படி செய்யவில்லை.
இதற்கு முன் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் மக்கள் பணியாற்றினோம். கரோனா நிவாரண நிதியாக ரூ.5,000 தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது தமிழக அரசு ரூ.1,000 வழங்கியது. தற்போது பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி ரூ.2,500 வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ரூ.2,500 வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இதே போல, திமுக கோரிக்கைக்குப் பின்னர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, மின்துறை தனியார்மயத்திற்கு எதிர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் ரத்து ஆகியவற்றை ஆளும் அரசு செய்து வருகிறது. எனவே, திமுக ஆட்சிதான் நடந்துவருகிறது.
தற்போது விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி நடந்துவருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் ஒரே மாநில அரசு அதிமுக அரசுதான்.
இங்கு 14 கிராமங்களில் வசிக்கும் மீனவர்களின் நலனில் இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை. மீனவர்களுக்கு டீசல் மானியம், மீனவர் நலவாரியம் அமைக்கவில்லை. 2016-ம் ஆண்டு மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.243 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் நடைபெறவில்லை. 1,000 ஏக்கரில் உள்ள உப்பள தொழிலாளர்களுக்கு எதுவும் இந்த அரசு செய்யவில்லை. தமிழகத்தில் உப்பு உற்பத்தி 25 சதவீதம் குறைந்துள்ளது. அதிமுகவை நிராகரித்து திமுகவை ஆட்சிக்கு கொண்டுவருவதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்".
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment