
வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
நாளை புதன்கிழமை புயல் உருவாக உள்ளதைத் தொடர்ந்து ராமேசுவரம், மண்டபம்
பகுதிகளைச் சேர்ந்த படகுகள் பாம்பன் பாலத்தைக் கடந்து பாதுகாப்பாக
குருசடைத் தீவு அருகே நிறுத்தப்பட்டன.
வங்கக்கடல் பகுதியில் நிலை
கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு கிழக்கு
தென்கிழக்கே சுமார் 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது
இன்று காலை (புதன்கிழமை) புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில்
இலங்கையைக் கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு
நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராமநாதபுரம்,
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்கடலோர மாவட்டங்களில்
டிசம்பர் 3-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.


மேலும் மீனவர்கள் யாரும் வரும் 4-ம் தேதிவரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புயலை
முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபம் பாக்ஜசலசந்தி,
ராமேசுவரம் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
விசைப்படகுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் பாலத்தைக் கடந்து
குருசடை தீவு அருகே 300-க்கும் மேற்பட்ட படகுகள் செவ்வாய்கிழமை
நிறுத்தப்பட்டன.
புதிய புயல் உருவாகவுள்ளதைத் தொடர்ந்து பாம்பன்
துறைமுகத்தில் செவ்வாய்கிழமை 3-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு
ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பாம்பன் கடல் பகுதி சீற்றமாகவும் காணப்பட்டது.
புயல் மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment