
கமல்ஹாசனின் நடவடிக்கை, பேச்சால் அவர் இருக்கிற வாக்கு வங்கியையும் இழந்து, தடம் தெரியாமல் போய்விடுவார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்வர் பிரச்சாரத்தைத் தொடங்கிவுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்துக்கு முதற்கட்டமாக முதல் வாரத்திலேயே வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் சீராகத்தான் உள்ளது. கமல்ஹாசன் என்னச் சொல்ல வருகிறார் என்பதையாவது தெளிவாகச் சொல்ல வேண்டும். தமிழகம் சீரமைக்கப்பட்டு நல்ல நிலைமையில் உள்ளதால் தான் கமலஹாசன் இவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழகம் சீராக இல்லாமல் இருந்திருந்தால், கலைத்துறையில் இவ்வளவு காலம் எப்படி கொடிகட்டிப் பறந்திருக்க முடியும். தமிழகம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக உள்ளது.
கமல்ஹாசன் இந்த நாட்டில் தான் உள்ளாரா? இதுயெல்லாம் அவருக்குத் தெரிகிறதா? இல்லையென்றால் தெரிகின்ற நிலையில் அவர் இருக்கிறாரா? மக்களே இன்று குழம்புகிறார்கள்.
கரோனா ஒழிப்பில் கேரளாவைப் பாருங்கள் என்றார். இன்று அங்கு கரோனா 2-வது அலை பாதிப்பு உள்ளது. ஆனால், தமிழகத்தில் அப்படியொரு பாதிப்பு இல்லை. கரோனா ஒழிக்கப்பட்ட நிலை உள்ளது. இவையெல்லாம் அவருக்குத் தெரிகிறதா அல்லது தெரியாத நிலையில் அவர் இருக்கிறாரா என எங்களுக்குத் தெரியவில்லை.
ஒரு அதிகாரி தனது பணியை விட்டு விலகி அரசியல் கட்சியில் இணைந்துவிட்டால் அவரை அரசியல்வாதியாகத்தான் பார்ப்பார்கள். கமல்ஹாசன் உத்தரவிட்டால், அவரது கட்சியில் இணைந்துள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள் கட்சிக்கு வேண்டுமென்றால் வேலை பார்க்கலாம்.
10 ஆண்டுகள் நாங்கள் ஆளும் கட்சியாக உள்ளோம். பிரச்சினைகளை கிளப்பும் பிரதான எதிர்கட்சியான திமுகவால், சட்டமன்றத்திலேயே ஒன்று கூட ஆதாரமாக நிரூபிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. குறை இருந்தால் தானே சொல்ல முடியும். கமல்ஹாசனின் நடவடிக்கை, பேச்சால் அவருக்கு இருக்கிற வாக்கு வங்கியும் சரிந்து இந்த தேர்தலோடு தடம் தெரியாமல் போய் விடுவார்.
மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி படக்குழு அறிவிக்கும். சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும்.
வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு முன்னதாகவே, அதில் உள்ள பல ஷரத்துகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்த விவசாயியும் பாதிக்கப்படவில்லை. குறிப்பிட்டசில வட மாநிலங்களில் விவசாயிகளின் பலன்களை பெற்றுவந்த இடைத்தரகர்கள் தான் போராட்டத்தை தூண்டி விடுகின்றனர்.
இதில், இடைத்தரகர்கள், கமிஷன் புரோக்கர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். உண்மையில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையென பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு உண்மையான விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சென்றால் பிரச்சினை தீர்ந்துவிடும். தமிழகத்தில் நேரடி விற்பனை உள்ளிட்ட கட்டமைப்புகள் வேளாண்மை துறையில் இருப்பதால் பாதிப்பு இல்லை.
அதனால் இங்குள்ள விவசாயிகள் போராடுவதற்குத் தயாராக இல்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புதிதாக எதையாவது உருவாக்கி தூண்டிவிட பார்க்கிறார்.
தேர்தலுக்காக மக்களை துன்புறுத்தக் கூடாது. பொய்ப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். சுயநலத்துக்காக மக்களை, விவசாயிகளை பகடைக்காயாக பயன்படுத்தப் பார்க்கிறார். ஆனால், தமிழக விவசாயிகள் விழிப்பு உள்ளவர்கள்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார், என்றார் அவர்.
No comments:
Post a Comment