Latest News

  

பயிரை மேயும் வேலி; குழந்தைகள் நலக்குழு உறுப்பினரின் தவறான நடத்தை: நடவடிக்கை கோரிய வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பாதிக்கப்படும் அனாதரவான குழந்தைகளைக் காக்கவேண்டிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினரே காப்பகத்துக்கு வரும் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்கிறார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு முகாம் உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக நலத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்பு இயக்குனரகம் ஆகியவை பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட அரசு சிறப்பு முகாமில் உள்ள குழந்தைகள் நலக்குழு உறுப்பினரான குளோரி ஆனி, முன்னாள் தலைவர் மணிகண்டன் மற்றும் முன்னாள் உறுப்பினர் முகமது சகாருதீன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், 'குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதிச் சட்டத்தை மீறிச் செயல்படுகிறார். பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களிலிருந்து மீட்கப்படும் குழந்தைகளை குழுவின் முன் ஆஜர்படுத்தாமல் மறைக்கிறார்.

இது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக அமைந்துவிடும். குழுவால் விசாரிக்கப்பட்ட சிறுமியிடம் நூறு ரூபாயைக் காண்பித்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி உறுப்பினர் தாமோதரன் வற்புறுத்தியுள்ளது ஆபத்தைத் தருகிறது. ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்ட அவரால், காப்பகக் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து அரசிடம் புகார் அளித்த எங்களைத் தாக்கினார். உறுப்பினர் தாமோதரனைப் பதவியிலிருந்து நீக்கும்படி தமிழக சமூக நலத்துறை செயலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு இயக்குனரக ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக சமூக நலத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்பு இயக்குனரகம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.