
சேலம்: தமிழகத்தின் நிதிநிலை அளவுக்கு 2ஜி அலைக்கற்றையில் திமுக ஊழல் செய்திருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, சென்னையில் ரூ.965 கோடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன.
7.5% உள் ஒதுக்கீடு மூலம் சேலம் மாவட்டத்தில் 26 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளனர்.
வீட்டிலேயே இருந்து கொண்டு அதிமுக ஆட்சியில் ஊழல், ஊழல் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எதிர்க்கட்சி தலைவருக்கு தினந்தோறும் அறிக்கை விடுவது மட்டுமே வாடிக்கை. அவருக்கு அறிக்கை நாயகன் என்று பட்டமே தரலாம்.
தமிழகத்தின் நிதிநிலை அளவுக்கு 2ஜி-யில் திமுக ஊழல் செய்துள்ளது. 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துவிட்டு, ஆளும் அதிமுக அரசு மீது மு.க. ஸ்டாலின் வீண் பழி சுமத்துகிறார்.
எனது உறவினர்களுக்கு டெண்டரை விட்டுக் கொடுத்ததாக ஸ்டாலின் குறைகூறி வருகிறார். ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில்தான் அதிக விலைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. உலக வங்கியின் வழிகாட்டுதல்படி டெண்டர்கள் ஆன்லைன் மூலம் வெளிப்படையாக விடப்படுகின்றன. டெண்டர் விடுவதில் இதுவரையில் எந்த முறைகேடும் நடைபெறுவில்லை. ஆன்லைன் டெண்டரில் யாரும் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்று தெரிவித்தார்.
சேலத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று எம்.பி. கனிமொழியின் குற்றச்சாட்டுக்கு, எடப்பாடி தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார். அவர் கூறுவது தவறு என்றும் கூறினார்.
No comments:
Post a Comment