நாடு முழுவதும் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான வரைவறிக்கையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் பாதிக்கபட்டதோடு நாட்டின் பொருளாதாரமும் பெரும் சரிவை சந்தித்தது. இதனிடையே பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுக்கும் வகையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பணியாளர்களின் வேலை நேரத்தை உயர்த்தி உத்தரவிட்டன. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் பணியாற்றும் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்த பரிந்துரைக்கும் வரைவறிக்கையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. பணியின் போது பாதுகாப்பு சுகாதாரம் பணிக்கான சூழல்களை மேம்படுத்துவது தொடர்பான OSH-WC-2020 என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த வரைவறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒருவாரத்துக்கு 48 மணி நேரத்துக்கும் மேலும் பணியாற்ற வழிவகை செய்கிறது. இந்த சட்டம் தொடர்பான கருத்துக்களை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment