பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் - 10 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 3.02 மணிக்கு சி 49 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ்.-01 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் என மொத்தம் 10 செயற்கைகோள்கள் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளன.
இந்தியாவின் செயற்கைக்கோளுடன் லிதுவேனியா நாட்டின் ஒரு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான நான்கு தொலையுணர்வு செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி சி-49 ரக ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், கொரோனா பெருந்தொற்று தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் திட்டத்தில் தொடர்புடைய ஊழியர்கள் அனைவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து பங்கெடுத்தார்கள் என்றார். இஸ்ரோ ஊழியர்களின் கடுமையான உழைப்பு காரணமாகவே இந்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

No comments:
Post a Comment