
சிவகங்கையில் இன்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. நகரில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்பாட்டிற்கு வராததால் வீதிகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் 2007-ம் ஆண்டு 23.5 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
13 ஆண்டுகளாக திட்டம் முடிவடையாததால் கழிவுநீர் அனைத்தும் ஏற்கனவே உள்ள கால்வாய்களில் ஓடுகிறது.
பாதாளச் சாக்கடை திட்டம் தொடங்கியதில் இருந்தே ஏற்கனவே இருந்த கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் பல இடங்களில் அடைப்பட்டு உள்ளன. மேலும் சிலர் கால்வாய்களை ஆக்கிரமித்து கடை, வீடுகளை கட்டியுள்ளனர். இதனால் செல்ல வழியின்றி ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் வீதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது.
அரண்மனைவாசல், நேருபஜார், காந்திவீதி, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கடைகள், குடியிருப்புக்குள் புகுந்தன.
மழை ஓய்ந்ததும் மக்கள் அவற்றை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இப்பிரச்சினை தொடர்வதால் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment