
குவைத் மன்னர் (எமிர்) ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா, தனது 91ஆம் வயதில் காலமானார்.
அவரது ஒன்று விட்ட சகோதரரும் பட்டத்து இளவரசருமான ஷேக் நவாஃப் அல் அஹ்மத் (83) புதிய மன்னராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம், அறிவிக்கப்படாத உடல் நல குறைபாட்டுக்கு சகிச்சை பெறுவதற்காக குவைத்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஷேக் சபா கொண்டு செல்லப்பட்டார்.
2006ஆம் ஆண்டு முதல் எண்ணெய் செல்வ வளம் கொழிக்கும் குவைத்தில் அவர் ஆட்சி செலுத்தி வந்தார். மேலும், அந்நாட்டின் வெளியுறவு கொள்கை அமலாக்கத்தை கடந்த 50 ஆண்டுகளாக அவர் மேற்பார்வையிட்டு வந்தார்.
அரசு ராஜீய உறவுகளின் தலைவர் என்று அரபு நாடுகளால் அழைக்கப்பட்டு வந்த ஷேக் சபா, 1990-91 ஆண்டுகளில் வளைகுடா போர் மூண்டு, குவைத்தை இராக் படையினர் ஆக்கிரமித்தபோது, இராக்கை ஆதரிக்கும் நாடுகளுடனான உறவை மீள்கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றினார்.
வளைகுடா பிராந்தியத்தில் செளதி அரேபியா, அதன் கூட்டணி நாடுகள், கத்தார் இடையே பதற்றம் அல்லது ராஜீய ரீதியிலான கசப்புணர்வு ஏற்பட்ட போதெல்லாம், அவற்றை மத்தியஸ்தம் செய்து வைக்க அல் சபாவின் தலையீடு அந்த நாடுகளுக்கு அவசியமாக இருந்தது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்தபோது, அதில் தலையிடாமல் குவைத் தவிர்த்தது. அதற்கு பதிலாக, அந்நாட்டுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை பெற பல்வேறு நன்கொடையாளர் மாநாடுகளை குவைத் நடத்தியது.
2006இல் அப்போதைய எமிர் ஷேக் சாத் அல்-அப்துல்லா, பதவியேற்ற ஒன்பது நாட்களிலேயே அப்பதவியை துறக்க நேர்ந்தது. அவரது உடல்நிலையை காரணம் காட்டி அவர் பதவி விலக நாடாளுமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது மன்னராக ஷேக் சபா ஆட்சிக்கு வந்தார்.
இதற்கு முன்பு குவைத் மன்னராக ஷேக் ஜெபர் அல் அஹ்மத் அல் ஜபெர் இருந்தபோது, நாட்டின் பிரதமராக ஷேக் சபா இருந்தார். அந்த காலகட்டங்களில் நாட்டின் "நடைமுறை மன்னர்" போல ஷேக் சபா பார்க்கப்பட்டார்.
அதற்கு முன்பு 1963 முதல் 1991, 1992 முதல் 2003ஆம் ஆண்டுவரை நாட்டின் வெளியுறவு அமைச்சராக அவர் பதவி வகித்தார்.
4.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட குவைத்தில், 3.4 மில்லியன் பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள். உலகின் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் வரிசையில் குவைத் ஆறாவதாக உள்ளது. அத்துடன் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருக்கிறது.
குவைத்தில் சபா குடும்பம்தான் கடந்த 260 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் வேறு எங்கும் இல்லாத வகையில் மிகவும் சக்தி வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றமாக குவைத் நாடாளுமன்றம் கருதப்படுகிறது. அங்கு எதிர்கட்சியினர் மிகவும் வெளிப்படையாகவே ஆளும் ஆட்சியாளர்களை விமர்சிப்பார்கள்.
எனினும், ஆளும் ஆட்சியில் உள்ள குடும்பமே அரசு, நிர்வாக பதவிகள், மன்னர் பதவி போன்றவற்றில் முழு கட்டுப்பாட்டை பெற்றிருக்கும். அரசியல் விவகாரங்களில் அந்த குடும்பத்தின் வார்த்தையே இறுதியானதாக கருதப்படும். நாடாளுமன்றத்தை கலைக்கவும், தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரத்தையும் குவைத் மன்னர் பெற்றிருப்பார்.
No comments:
Post a Comment