
சென்னையின் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்காக ரூ.100 கோடி ஒதுக்க நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார். இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட முன்வடிவு மற்றும் மத்திய ஹோமியோபதி கவுன்சில் சட்ட முன்வடிவு விவாதத்தில் நேற்று பேசினார்.
இந்த முன்வடிவுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட தென்சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்ததாவது:
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாநில வாரியான தேர்வுகளின் மூலமாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.
மக்களவை தீர்மானத்தை நிறைவேற்றி இதனை உருவாக்கி கொடுத்திருந்தது. ஆனால் இப்போது இந்த புதிய சட்டவடிவு இந்த நிலையை குலைத்துவிட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை நியமனம் செய்வது என்பதற்கு பதிலாக மத்திய அரசே நேரடியாக இந்த கவுன்சிலுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்ய இது வழிவகை செய்கிறது.
ஆகவே இதன் மூலமாக ஜனநாயக நெறிமுறைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. எனவே எனது ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்கிறேன்.
'ஒரே நாடு, ஒரே கொள்கை' என்ற நிலைப்பாட்டை முன்வைத்து மத்திய அரசு ஏராளமான அதிகாரங்களைப் பெற்றுக் குவித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்நிலைப்பாடும் ஒன்று.
மாநிலவாரியான பிரதிநிதிகள் இந்த கவுன்சிலில் இயங்குவதன் மூலமாக மாநில மக்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களையெல்லாம் நீக்கிவிட்டு மத்திய அரசே நேரடியாக உறுப்பினர்களை இந்த
கவுன்சிலுக்கு நியமித்தால் அவர்களுக்கு மாநிலங்களின் மீதான தனிப்பட்ட அக்கறை எப்படி வரும். மருத்துவம் என்பது மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. மருத்துவக் கல்வி என்பது மத்திய- மாநில அரசுகளுக்கிடையிலான பொதுப்பட்டியலில் இருக்கிறது.
எனவே, இந்த அம்சத்தைப் பொருத்தவரை மாநிலங்களுக்கும் சரி சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டிய கடமை மத்தியஅரசுக்கு உண்டு. நமது நாட்டில் இருநூறுக்கும் மேற்பட்ட ஆயுர்வேதா கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதேபோன்று யுனானி மற்றும் ஓமியோபதி ஆராய்ச்சி கவுன்சில்களும் இயங்குகின்றன.
என்னுடைய ஒரு யோசனை இங்கே உண்டு. ஓமியோபதி யுனானி ,இயற்கை மருத்துவம் மற்றும் யோகா, சித்தா, ஆயுர்வேதம் ஆகிய அனைத்து மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து ஒரே மருத்துவ கவுன்சிலை உருவாக்க வேண்டும்.
இதனை தேச முக்கியத்துவம் வாய்ந்த கவுன்சிலாக அங்கீகரித்து இயங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். ஹோமியோபதி மருத்துவ முறையை கையாள்வதைப் பொருத்தவரை தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் தம்மை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர். இவர்கள் டிகிரி மற்றும் டிப்ளமோ முடித்து அதன் பின்னணியில் பதிவு செய்தவர்கள்.
உலக அளவிலான ஹோமியோபதி பயிற்சி முறையில் முன்னணியாக விளங்கக்கூடிய நாடாக இந்தியா திகழ்கிறது. கல்வித்தரத்தில் ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா முடித்த மருத்துவர்கள் சிறு பயிற்சி வகுப்புகளைக் கவனிப்பதன் மூலமாக அவர்கள் நவீனமருத்துவம் பார்க்கக் கூடிய அளவுக்கான அனுமதி வழங்குவது ஆபத்தானது.
ஆகவே இதனை அமைச்சர் பரிசீலனை செய்து உரிய மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும். சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு நூறு கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து அதனுடைய விரிவாக்கத் திட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
கொல்லிமலை, குற்றாலம், ஏலகிரி, ஒகேனக்கல் ஆகிய தமிழகத்து ஊர்களில் மூலிகைப் பண்ணைகளை அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆயுஷ் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் சீராகப் பராமரிக்கப்பட மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் உரை நிகழ்த்தினார்.-
No comments:
Post a Comment