
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வின்றி மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக மாநில அரசுகள் அறிவிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட வழிகாட்டுதல்களை எதிர்த்து சில மாநில அரசுகள், சில மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் ஆர். சுபாஷ் ரெட்டி, அசோக் பூஷண், எம்ஆர். ஷா அடங்கிய அமர்வு விசாரித்து இன்று உத்தரவிட்டது.
எனினும், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக்குழு தேர்வு நடத்த நிர்ணயித்த இறுதிக்கெடுவை கொரோனா பரவல் தடுப்புக்காக பயன்படுத்தப்படும் பேரிடர் மேலாண்மை சட்டப்படி நீட்டிப்பது தொடர்பாக மாநிலங்கள், யுஜிசியை அணுகலாம் என்று நீதிமன்றம் உத்தரவில் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இறுதி ஆண்டு தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் அவர்களை மேல்படிப்புக்கு தேர்வுறச்செய்ய மாநில அரசுகளை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.
என்ன வழக்கு?
இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஜூலை 8ஆம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
கல்லூரி இறுதி ஆண்டுத்தேர்வுகள் மற்றும் புதிய கல்வியாண்டு தொடக்கம் தொடர்பாக மாநிலங்கள் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த யுஜிஜி முறையிட்டது.
மேலும், டெல்லி, மகராஷ்டிரா ஆகியவற்றின் அரசுகள், இறுதி ஆண்டு தேர்வுகள் விவகாரத்தில் தமது வழிகாட்டுதல்களுக்கு முரணான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் யுஜிசி சார்பில் ஆஜரான இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, தேர்வுகள் நடத்தாமல் பட்டங்களை வழங்க யுஜிசிக்கு அதிகாரம் இல்லை என்றும் மாணவர்களின் நலன் கருதியே தேர்வுகள் நடத்தப்படுவதாகவும் மேல் படிப்பு மற்றும் வேலைக்காக விண்ணப்பிப்பவர்களின் நலன்களும் இதில் அடங்கியிருப்பதாக நீதிமன்ற்ததில் கூறியிருந்தார்.
மகராஷ்டிராவின் சிவசேனை கட்சியின் இளைஞரணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷ்யாம் திவான், நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மூட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதன் வழிகாட்டுதல் விதிகளை மாநிலங்கள் கடுமையாக்க வேண்டுமே தவிர, நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்று வாதிட்டார்.
இறுதி ஆண்டு சட்டக்கல்வி மாணவர் யாஷ் தூபே சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, கோவிட் பத்தொன்பது வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டே தேர்வுகளை ரத்து செய்ய சில மாநிலங்கள் முடிவு செய்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
பின்னணி: நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் இறுதி ஆண்டுத்தேர்வுகளை உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப்பின்பற்றி வரும் செப்ம்பர் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று யுஜிசி வழிகாட்டுதல்களை வெளியிடப்பட்டது. அந்த நடவடிக்கை, பல மாநில அரசுகள் இறுதித்தேர்வு தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகளுடன் முரண்படுவதாகக் கூறி சில மாணவர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை அணுகின.
தமிழ்நாட்டுக்கு பொருந்துமா?
தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டுக்கு பொருந்த வாய்ப்பில்லை. காரணம், தமிழ்நாட்டில் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளில் இறுதி ஆண்டு நீங்கலாக உள்ள பிற தேர்வுகளில் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விளக்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தெளிவுபடுத்தினார்.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment