
கடந்த ஆறு மாதங்களில் டெல்லியில் நடந்த கலவர சம்பவங்களில், காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. இந்த புகார்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் தனி கவனம் செலுத்தும் சர்வதேச அரசு சாரா அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல், கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரங்கள் தொடர்பான சுயாதீன விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், டெல்லி காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கலவரத்தை தடுக்கத் தவறியது, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளை அடையாமல் தடுத்தது, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன.
கலவரத்தைத் தொடர்ந்து ஆறு மாதங்களில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டப்படுவது, அமைதி வழியில் போராடியவர்களை சிறையில் அடைத்தல் மற்றும் அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அறிக்கையில் உள்ளன. இதில் ஒரு வழக்கு கூட மனித உரிமை மீறலில் டெல்லி காவல்துறை ஈடுபட்டதாக பதிவாகவில்லை என்று அறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதை நினைவில் கொள்ளலாம்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் செயல் இயக்குநர் அவினாஷ் குமார் கூறுகையில், "குற்றம் செய்வோருக்கு அதிகார மட்டத்தில் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு என்பது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் பொறுப்புணர்வு இல்லாமல் மேலும் ஆழமாக மனித உரிமை மீறலைச் செய்ய முடியும் என்ற தகவலை உணர்த்துகிறது. அதாவது, அவர்கள் சட்டத்தை கையில் எடுக்கலாம்" என்று தெரிவித்தார்.
அந்த அறிக்கையை வெளியிடும் முன்பு, குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி காவல்துறையினரை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அணுகியது. ஒரு வாரம் கடந்த நிலையில், அந்த அறிக்கை இப்போது பொதுவெளிக்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், டெல்லி காவல்துறை இணை ஆணையாளர் அலோக் குமார், பிபிசி ஹிந்தி சேவை செய்தியாளர் சல்மான் ராவிக்கு பேட்டியளித்தார். அதில், கலவரத்தின் போது காவல்துறையினர் மெளனப் பார்வையாளர்களாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டை மறுத்தார். "காவல்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால், அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்" என்று அப்போது அலோக் குமார் கூறினார்.
முன்னதாக, டெல்லி கலவரங்கள் குறித்து டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் உண்மை கண்டறியும் அறிக்கையை வெளியிட்டது. அதில், பல பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தபோதும், அவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை என்றும் சமரசம் செய்ய அச்சுறுத்தியதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதேவேளை, முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்த சில காவல்துறையினர், இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டியதாக சிலர் மீது போலியாக குற்றச்சாட்டை ஜோடித்ததாக கூறப்பட்டுள்ளது.
கலவரத்துக்கு முன்பு டெல்லி காவல்துறையின் பங்கு
அம்னஸ்டி இன்டர்நேஷனலின் இந்த அறிக்கை, கலவரத்தால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. நேரில் பார்த்த சாட்சிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் மக்களின் காணொளிகளை அடிப்படையாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 15, 2019 அன்று, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் டெல்லி காவல்துறையினர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்கள் தாக்கப்படுவது மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாக அறிக்கை குற்றம்சாட்டுகிறது.
அந்த சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக் கோரிய பொது நல மனுக்களை டெல்லி காவல்துறை ஆட்சேபித்தது.
அதைத் தொடர்ந்து, ஜனவரி 5, 2020 அன்று, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் இருபதுக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது இரும்புத்தடிகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் அறிக்கையில் விவரிக்கப்படுகிறது.
இதில் ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து 40 க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டபோதிலும், டெல்லி காவல்துறை ஒரு முதல் தகவல் அறிக்கையைக் கூட பதிவு செய்யவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
இருப்பினும், தாக்குதலில் காயமடைந்த ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் ஆயிஷி கோஷ் உட்பட சில CAA எதிர்ப்புக்குழுவினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற பல தேர்தல் பேரணிகளில் பாஜக தலைவர்களின் ஆத்திரமூட்டும் உரைகள் பற்றிய தகவல்கள் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.
பிறகு, பிப்ரவரி 26ஆம் தேதி, பாஜக எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு எதிரன புகார்கள் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், ஒருவர் மீதும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று அம்னெஸ்டி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஜூலை மாதம் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யாவுக்கு இந்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அளித்த நேர்காணலின்போது, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பாஜகவினர் பேசியதாக கூறப்படுவதை மறுத்தார். அத்தகைய செயல்பாடுகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் என்று அப்போது அவர் கூறினார். நாட்டின் மதசார்பற்ற தன்மையை அத்தகைய செயல்பாடுகள் களங்கப்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார். அத்தகைய நச்சுத்தன்மை உரைகளை நியாயப்படுத்தக்கூடாது என்றும் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியிருந்தார்.
இந்த நிலையில், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையில், அவசர தேவைக்காக டெல்லி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ தொடர்பு கொண்டபோது, எவரும் மறுமுனையில் அழைப்பை எடுக்கவில்லை என கலவரத்தால் பாதிக்கப்பட்ட பலரும் கூறியது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அறிக்கையில், ஷூ காலணிகளால் தனது தாயுடன் பேசிய நபரை காவல்துறையினர் தாக்கியதாகவும் அந்த நபர் 36 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த நபரின் தாயார் குறிப்பிடும்போது, தடுத்து வைக்கப்பட்டதற்கான ஆவணத்தையோ, சட்டப்படி 24 மணி நேர காவல் முடிவடைந்து மாஜிஸ்திரேட் முன்னிலையிலோ தமது மகன் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும் கூறியதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் பதிவு செய்துள்ளது.
"கலவரத்தால் பாதிக்கப்பட்டு மீண்டவரான நவாப் அலி, டெல்லி காவல்துறையை தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அங்கிருந்து உயிர் தப்பினால் போதும் என்றாகி விட்டது. எல்லாவித ஆயுதங்களுடனும் அவர்கள் இருந்தார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
கலவரம் நடந்தபோது, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல முற்பட்டபோது அவர்களை நோக்கி கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததாகவும் அதை கண்டும் மெளனப்பார்வையாளர்களாக காவல்துறையினர் இருந்தனர் என்றும் அறிக்கை கூறுகிறது.
கலவரத்தில் பலியான 53 பேர் முஸ்லிம்கள் என்றும் ஹிந்து சமூகத்தினரால் அவர்களின் வீடுகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டதையும் அறிக்கை பதிவு செய்கிறது.
கலவரங்களுக்குப் பிறகு காவல்துறையின் பங்கு
கலவரத்திற்குப் பின்னர் காவல்துறை நடத்திய விசாரணை மற்றும் கலவரங்களுக்குப் பின்னர் முஸ்லிம்களை கைது செய்த அதன் நடவடிக்கை குறித்தும் கலவரம் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆராய்ந்துள்ளதாக கூறுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக மனித உரிமை செயல்பாட்டாளர் காலித் சைஃபி கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி, அவர் போலீஸ் காவலில் இருந்தபோது, சிகிச்சைக்காக மார்ச் மாதம் வெளியே வந்தபோது சக்கர நாற்காலியில் வந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமான யுஏபிஏ பிரிவுகளின்கீழ் சைஃபி ஆறு மாதம் சிறையில் அடைக்ப்பட்டார்.
மேலும், காவலில் இருந்த பலர் துன்புறுத்தப்பட்டு போலியாக வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட அவர்கள் நிர்பந்திக்கப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.
'ஹ்யூமன் ரைஸ்ட் லா நெட்வொர்க்" என்ற அரசு சாரா அமைப்பின் வழக்கறிஞர் இது குறித்து குறிப்பிடுகையில், காவலில் இருந்த தனது கட்சிக்காரரை கூட சந்திக்க விடாமல் காவல்துறையினர் மோசமாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
ஜூலை 8ஆம் தேதி, டெல்லி கலவரம் தொடர்பான கைதுகள் குறித்த ஓர் துறை ரீதியிலான உத்தரவில், ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படாத வகையில் கவனித்து செயல்படுமாறு கூறப்பட்டிருந்தது. அந்த உத்தரவை கடுமையாக டெல்லி உயர் நீதிமன்றம் விமர்சித்தபோதும், அது திரும்பப்பெறப்படவில்லை என அறிக்கை கூறுகிறது.
டெல்லி காவல்துறையின் கலவர சம்பவங்கள் தொடர்பான செயல்பாடுகள் குறித்த வெளிப்படையான, தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் செய்தவர்கள் பொறுப்புடைமையாக்கப்பட வேண்டும் என்று தமது விசாரணை அறிக்கையை தொகுத்துள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், வகுப்புவாத பதற்றம் மற்றும் வன்முறை சம்பவங்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு சிறந்த பயிற்சி வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தவிர வகுப்புவாத வன்முறை சம்பவங்கள், அவை தொடர்புடைய கைது நடவடிக்கை, தடுப்புக்காவல் நடவடிக்கை, இனம், மதம், பாலினம், அரசியல் பின்புலம் என எந்த பாகுபாடும் பார்க்காமல் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று அம்னெஸ்டி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, அனைத்து காவல்துறை தலைமையகங்களிலும் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் இந்த அறிக்கை தொடர்பான கருத்துகளை பெற பிபிசி தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை தரப்பு பதில் கிடைத்ததும், அதன் தரப்பு விளக்கத்தையும் இங்கே பதிவு செய்கிறோம்.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment