
மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக அசாம் மாநில முன்னாள் முதல்வரின் மகன் கவுரவ் கோகோய், மாநிலங்களவைத் தலைமை கொறடாவாக ஜெய்ராம் ரமேஷை நியமித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
மக்களவையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் பதவிக்கு நீண்டகாலமாக யாரும் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் கவுரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தபோது, முழுநேரத் தலைமை தேவை, அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றம் தேவை என்று 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து 7 மணிநேரம் நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த நியமனங்கள் நடந்துள்ளன. மக்களவையில் தங்கள் தலைவர்களின் வலிமையை அதிகப்படுத்தும் வகையில் இந்த நியமனம் நடந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குத் தயாராகும் வகையில் இந்த நியமனங்கள் நடந்துள்ளன.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்கிறார். மக்களவையில் தலைமைக் கொறடாவாக கே. சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் எம்.பி. பிட்டு, மாணிக்கம் தாகூர் ஆகியோர் மக்களவையில் கொறடாக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவையின் தலைமைக் கொறடாவாக மூத்த எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அசாமைச் சேர்ந்த கவுரவ் கோகோய் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மகன் ஆவார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கவுரவ் கோகோய்க்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடைசியாக மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பஞ்சாப் மாநில முதல்வராக உள்ள அமரிந்தர்சிங் இருந்தார். அவர் சென்றபின் அந்தப் பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படாத நிலையில், கவுரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்க 10 மூத்த எம்.பி.க்கள் கொண்ட குழுவையும் சோனியா காந்தி உருவாக்கியுள்ளார். அந்தக் குழுவில், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், அகமது படேல், கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகோய், கே.சுரேஷ், மாணிக்கம் தாகூர், ரவ்நீத் சிங் பிட்டு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment