Latest News

நீட் ஜேஇஇ தேர்வுகள்...ரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க... ராமதாஸ் கோரிக்கை!!

சென்னை: நீட், ஜேஇஇ நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் எஸ். ராமதாஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக எஸ். ராமதாஸ் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளையும் (NEET), இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளையும் (IIT-JEE) ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், திட்டமிட்டபடி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு ஏமாற்றமளிக்கிறது.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான முதன்மை நுழைவுத் தேர்வுகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 6ஆம் தேதி வரையிலும், நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பரவல் குறையாததை கருத்தில் கொண்டு, இரு நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மே 30ஆம் தேதி தொடங்கி 5 முறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், எதையும் கருத்தில் கொள்ளாமல் நீட் தேர்வும், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகளும் திட்டமிட்டபடி அடுத்த மாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறுவது மாணவர்களின் மீது அக்கறையற்ற செயலாகும்.

நீட் மற்றும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி அடுத்த மாதம் நடத்தப்படும் என்பது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத, சாத்தியமும் இல்லாத ஒன்றாகும். இந்தியாவில் நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடத்தப்படும் என்று கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நீட் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த மார்ச் 27ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

கோவிட் 19 சுய உறுதி படிவம் என்றால் என்ன?.. நீட் மாணவர்களுக்கு கட்டாயம்!

அப்போது இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 140 மட்டும் தான். பின்னர் ஜூலை 26-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று மே 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய நாளில் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 3975 மட்டும் தான். பின்னர் செப்டம்பர் 13ஆம் தேதிக்கு நீட் தேர்வை ஒத்திவைத்து ஜூலை 3-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த நாளில் தினசரி கொரோனா தொற்று 20,903 ஆக இருந்தது. அதனால் தான் நீட் தேர்வை நடத்த இயலாது என ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவில் இப்போது தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தொட்டுவிட்டது. 140 பேர் பாதிக்கப்பட்ட போதும், 3975 பேர் பாதிக்கப்பட்ட போதும், 20,903 பேர் பாதிக்கப்பட்ட போதும் நடத்த முடியாத நீட் தேர்வை, தினசரி 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் போது மத்திய அரசு எவ்வாறு பாதுகாப்பாக நடத்தும்?

இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு 16 லட்சம் பேரும், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கு சுமார் 10 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள தேர்வு மையங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, போதிய இடைவெளி விட்டு, இவ்வளவு பேரையும் பாதுகாப்பாக அமர்த்தி நுழைவுத்தேர்வு எழுத வைப்பது என்பது சாத்தியமே இல்லை.

பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் கல்வியை விட உயிர் முக்கியம். அதனால் தான் ஏராளமான பெற்றோர் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தினமும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், பெற்றோரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

NEET Exam: தமிழக மாணவர்களின் சதவீதம் சரிவு

நீட் தேர்வு எழுதும் மாணவர்களை விட, அவர்களை நினைத்து அதிகம் கலங்கி நிற்பவர்கள் பெற்றோர்கள் தான். அவர்களின் உணர்வுகளை நன்கு அறிந்தவன் நான். அதனால், தான் கடந்த சில மாதங்களில் ஆறாவது முறையாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகிறேன். இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்களும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்;நுழைவுத்தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது வெற்றி அல்ல. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் உணர்வுகளை புரிந்து, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, நெருக்கடியான இந்நேரத்தில் அவர்களின் அச்சத்தைப் போக்கி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவது தான் அரசின் வெற்றி ஆகும்.

கொரோனா அச்சம் காரணமாக பெரும்பான்மையான மாணவர்கள் எந்த நுழைவுத்தேர்வுக்கும் தயாராகவும் இல்லை. இன்னும் அவர்களின் பதற்றம் தணியாத நிலையில், இப்போது நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்களின் திறமையை அளவிட முடியாது. மாறாக, இந்த நேரத்தில் தேர்வு நடத்துவது கொரோனா வைரஸ் பரவலுக்கு மட்டும் தான் வழி வகுக்கும். எனவே, இந்த விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டாமல் நீட் தேர்வையும், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வையும் ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.

source: oneindia.com

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.