
சென்னை: உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய் உறங்கிவிட்டது, பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த பாரத ரத்னா விடைகொண்டார் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். டெல்லியில் கண்டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் இவர் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு மூளை குழாயில் அடைப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இவரின் உடல் நாளுக்கு நாள் நலிவடைந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
கட்சி பாகுபாடு இன்றி பலரிடம் பிரணாப் முகர்ஜி நெருக்கமாக பழகி வந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு தற்போது கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமாக டிவிட் செய்துள்ளார். அதில்,
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு
இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது.
உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய்
உறங்கிவிட்டது.
பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த
பாரத ரத்னா விடைகொண்டார்.
போய் வாருங்கள் பிரணாப்!
இந்தியா உங்களை
நீண்டகாலம் நினைக்கும்.
என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
source: oneindia.com
No comments:
Post a Comment