
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூஷணை நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து இன்று உத்தரவிட்டது. அவருக்கான தண்டனை தொடர்பான வாதங்கள், வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்படவுள்ளது.
பிரசாந்த் பூஷணுக்கு எதிரான மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். காவ்ய, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், கடந்த ஜூன் 29-ஆம் தேதி தமது டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ. 50 லட்சம் மதிப்பிலான பாஜக தலைவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுடன் நாக்பூரில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுகிறார். அதுவும் உச்ச நீதிமன்றத்தை முடக்கி விட்டு குடிமக்கள் நீதி பெறும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிலையில் என்றவாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த டிவிட்டர் சர்ச்சை தகவல் தொடர்பாக பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
முன்னதாக, ஜூன் 27-ஆம் தேதி "எதிர்கால வரலாற்றாய்வாளர்கள், கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறையான அவசரநிலை இல்லாமல் கூட இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டுவிட்டது என்பதைப் பார்க்கும்போது, அவர்கள் குறிப்பாக இந்த அழிவில் உச்சநீதிமன்றத்தின் பங்கை, மேலும் குறிப்பாக தலைமை நீதிபதிகளாக இருந்த நால்வரின் பங்கை பார்ப்பார்கள்" என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சர்ச்சை டிவிட்டர் தகவல்கள் தொடர்பாக பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தமது டிவிட்டர் தகவல்கள் நியாயமானவை என்று கூறி, அதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தனக்கு எதிரான மனுவை, அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் பட்டியலில் சேர்த்த உச்ச நீதிமன்ற செகரட்டரி ஜெனரலின் நடவடிக்கைக்கு எதிராக மற்றொரு மனுவையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி, தகுதி அடிப்படையில் விசாரிக்க முடிவு செய்த உச்ச நீதிமன்றம், தற்போது அவரது நடவடிக்கையைக் குற்றமாகக் கருதி அவரை குற்றவாளியாக அறிவித்திருக்கிறது.
இதற்கிடையே,சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் பதிவிட்டிருந்த டிவிட்டர் பதிவுகள் இரண்டும் தற்போது சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதால் டிவிட்டர் நிறுவனம் முடக்கியிருப்பதாகக் கூறியுள்ளது.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment